பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்க பசுபிக் பிராந்திய மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் விமானப் படைத் தளபதிகள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு பாதுகாப்பு, இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படைத் தலைமையகங்களில் நடைபெற்றன. பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்று முன்தினம் மாலை வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பஹதோரியா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ணவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதேபோன்று, அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத் தளபதி ஜெனரல் கெனெத் எஸ். வில்ஸ்பெச், பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் முஜாஹித் அன்வர் கான் மற்றும் பங்களாதேஷ் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் மஸீஹ_ஸ்ஸமான் செர்னியபாத் ஆகியோருக்கும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ணவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சில் தனித்தனியாக நடைபெற்ற இந்த சந்திப்புக்களின் போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், இந்த சந்திப்பை நினைவு கூரும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதேவேளை, இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பஹதோரியா இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படைத் தலைமையகங்களுக்கும் விஜயம் செய்ததுடன் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன். இங்கு வழங்கப்பட்ட விஷேட மரியாதை அணிவகுப்புக்களையும் பார்வையிட்டார்.

பாகிஸ்தான், அமெரிக்க பசுபிக் பிராந்திய மற்றும் பங்களாதேஷ் விமானப் படைத் தளபதிகளும் நேற்று விமானப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் விஷேட சந்திப்புக்களை மேற்கொண்டனர். இவர்களுக்கு விஷேட மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டன.

இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கும் பொருட்டு இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்தியா, பாகிஸ்தான் அமெரிக்க பசுபிக் பிராந்திய மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளின் விமானப் படைத் தளபதிகள் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்

 

Fri, 03/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை