சிரிய ஜனாதிபதி அஸாத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா இருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தனிமைப்படுத்தலில் இருப்பதாக அந்நாட்டு அரசு திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

கொவிட்–19 நோய் அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் சோதனை மேற்கொண்டபோது வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தமது வீட்டில் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் சுய தனிமையில் இருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் கொரோனா தொற்றினால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை அங்கு சுமார் 15,000 தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டபோதும் உண்மையான எண்ணிக்கை இதனை விட அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் வடமேற்கு பகுதியில் 21,209 தொற்றுச் சம்பவங்களில் 632 பேர் உயிரிழந்திருப்பதாக எதிர்த்தரப்பின் உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டு 10 ஆண்டுகளை எட்டும் நிலையில் அங்கு தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட போதும் அதுபற்றி குறைவான செய்திகளே வெளியாகியுள்ளன.

Wed, 03/10/2021 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை