சுயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கியுள்ள கப்பலால் நெரிசல்

இராட்சத கொள்கலன் கப்பல் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குறுக்காக சிக்கிக்கொண்டதால் எகிப்தின் சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் பயணத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

400 மீற்றர் நீளம் மற்றும் 59 மீற்றர் அகலம் கொண்ட இந்தக் கப்பலுக்கு உதவியாக இழுவைப் படகுகள் அனுப்பப்பட்டபோதும் நிலைமையை சீர்செய்ய பல நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று அஞ்சப்படுகிறது.

சுயஸ் கால்வாயின் வடக்காக கடந்த செவ்வாய்க்கிழமை காலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. மத்தியதரைக் கடலில் இருந்து செங்கடலை இணைக்கும் இந்த நீர்ப்பாதை ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான குறுகிய கடல் பாதையாக உள்ளது.

பனாமாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பல், சீனாவில் இருந்து நெதர்லாந்தின் ரொட்டர்டாம் துறைமுகத்தை நோக்கி பயணித்துள்ளது.

கால்வாயை முழுமையாக தடுக்கும் வகையில் குறுக்காக சிக்கி இருப்பதால் இரு பக்கங்களில் இருந்து வரும் கப்பல்களும் முன்னேற முடியாமல் நெரிசலுக்கு உள்ளாகியுள்ளன.

போக்குவரத்து தடைபட்டதால், 100க்கும் அதிகமான கப்பல்கள் கால்வாயைக் கடந்து செல்ல காத்துக்கொண்டிருப்பதாக புலும்பர்க் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

சர்வதேச கடல்துறை வர்த்தகத்தில், சுமார் 10 வீதமானது சுயஸ் கால்வாயை கடந்து செல்கிறது. கடந்த ஆண்டு, சுமார் 19,000 கப்பல்கள் கால்வாயைக் கடந்து சென்றன. அதில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளின் மொத்த எடை 1 பில்லியன் தொன்களுக்கு அதிகம்.

சுயஸ் கால்வாய் மூன்று இயற்கையான ஏரிகளை இணைத்து அமைக்கப்பட்ட 193 கிலோமீற்றர் நீளமான நீர்ப்பாதையாகும்.

Thu, 03/25/2021 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை