ஆங் சான் சூச்சி நீதிமன்றத்தில் ஆஜர்: புதிய குற்றச்சாட்டு பதிவு

மியன்மாரில் பதவி கவிழ்க்கப்பட்ட ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் முதல் முறை தனது வழக்கறிஞர் உடன் தோன்றியுள்ளார்.

வீடியோ இணைப்பு ஊடாக நேற்று நீதிமன்றத்தில் தோன்றிய சூச்சி, நல்ல உடல் நிலையுடன் காணப்படுவதாக அவரது வழங்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது தொடக்கம் அவர் இரகசியமான இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அது தொடக்கம் நாட்டில் பதற்றம் நீடிப்பதோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக இராணுவம் மற்றும் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடுகளிலேயே பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் ஜனநாயக முறையில் தேர்வான அரசை மீண்டும் பதவிக்குக் கொண்டுவரக் கோரி நேற்றும் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கைது செய்யப்பட்டிருக்கும் சூச்சி மற்றும் ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் ஏனைய தலைவர்களை விடுவிக்கும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

ஆளும் கட்சி அமோக வெற்றியீட்டிய கடந்த ஆண்டு தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகக் கூறியே இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. எனினும் அந்தக் குற்றச்சாட்டுக் குறித்து எந்த ஆதாரத்தையும் வெளியிட இராணுவம் தவறியுள்ளது.

இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் தோன்றிய சூச்சி மீது ஆரம்பத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வோக்கி டோக்கி கருவிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாகவும் மியன்மாரின் இயற்கை அனர்த்த சட்டத்தை மீறியதாகவுமே அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதில் நேற்று மேலும் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன. தேர்தல் பிரசாரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது மற்றும் அச்சம் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதான குற்றச்சாட்டுகளும் அடங்கும்.

ஆரம்ப குற்றச்சாட்டுகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்ற நிலையில் தற்போதைய குற்றச்சாட்டுகளுக்கான தண்டனை பற்றிய விபரம் உறுதி செய்யப்படவில்லை. இந்த வழக்கு வரும் மார்ச் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இராணுவத்தால் சூச்சி கைது செய்யப்பட்டது தொடக்கம் உள்நாட்டில் அவர் மீதான ஆதரவு அதிகரித்தபோதும் ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான வன்முறையின்போது எதிர்வினையாற்றாதது தொடர்பில் அவர் மீது சர்வதேச அளவில் விமர்சனம் உள்ளது.

Tue, 03/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை