சுவிட்சர்லாந்தில் புர்கா தடைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்கு

முஸ்லிம் பெண்களின் புர்கா அல்லது நிகாப் உட்பட பொது இடங்களில் முகத்தை மறைக்க தடை விதிப்பதற்கு சுவிட்சர்லாந்தில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் ஆதரவு கிடைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக 51.2 வீத வாக்குகள் கிடைத்திருப்பதோடு எதிராக 48.8 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

‘தீவிரவாதத்தை தடுப்போம்’ போன்ற பிரசாரங்களுடன் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி இந்த முன்மொழிவை கொண்டுவந்தது.

‘முஸ்லிம்களுக்கு இது ஒரு கறுப்பு தினம்’என்று சுவிட்சர்லாந்தின் முன்னணி இஸ்லாமிய அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

“பழைய காயங்களை மீட்பதாகவும், சட்டபூர்வமான பகுபாட்டுக் கொள்கையை விரிவுபடுத்துவதாகவும், முஸ்லிம் சிறுபான்மையினரை ஒதுக்குவது பற்றிய தெளிவான செய்தியாகவும் இன்றைய முடிவு உள்ளது’ என்று முஸ்லிம்களின் மத்திய கவுன்சில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வதாகவும் அது தெரிவித்துள்ளது.

பெண்கள் எதனை அணிய வேண்டும் என்று ஆணையிடும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று இந்தத் தடைக்கு எதிராக சுவிஸ் அரசு வாதிட்டுள்ளது.

லுசேர்ன் பல்கலைக்கழகம் (ஜெர்மனி) மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட எவரும் புர்கா அணிவதில்லை என்றும் சுமார் 30 பெண்கள் மாத்திரம் நிகாப் அணிவதாகவும் கூறப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் 8.6 மில்லியன் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 5 வீதமாக இருப்பதோடு இவர்களில் துருக்கி, பொஸ்னியா மற்றும் கொசோவோ நாடுகளை பூர்வீகமாகக் கொண்டவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

2011 இல் பிரான்ஸில் முழு முகத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதோடு டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளிலும் முழுமையான அல்லது பகுதி அளவில் இந்தத் தடை உள்ளது.

முகத்திரை தடையானது மத மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரம் உட்பட பெண்கள் உரிமைகளை மறுக்கும் ஆபத்தான கொள்கை என்று சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள நேரடி ஜனநாயக முறைமை மூலம் அந்நாட்டு மக்கள் சொந்த விவகாரங்கள் தொடர்பில் நேரடியாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. அந்நாட்டில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் தேசிய மற்றும் பிராந்திய மட்டத்திலான சர்வஜன வாக்கெடுப்புகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன.

எனினும் இந்த சர்வஜன வாக்கெடுப்பில் இஸ்லாமி விவகாரம் கையில் எடுக்கப்படுவது இது முதல்முறை அல்ல. 2009 இல் நாட்டில் பள்ளிவாசல்களில் மினாரத் கட்டுவதற்கு தடை விதிக்க பெரும்பான்மை மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

 

Tue, 03/09/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை