மேடை நாடக கலைஞர்களுக்கு காப்புறுதித்திட்டம் அறிமுகம்

-  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை 

மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கம் காப்புறுதி தொகையை செலுத்தி 'ப்ரேக்ஷா' காப்புறுதியை வழங்குவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நடைபெறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (16)  அலரி மாளிகையில் தெரிவித்தார். 

மேடை கலைஞர்களுக்கான 'ப்ரேக்ஷா' விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதியை மேடை நாடக கலைஞர்களுக்கு வழங்கும் நிகழ்வின் தொடக்க விழாவின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

தேசிய மரபுரிமை, அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க அறக்கட்டளை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ப்ரேக்ஷா விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதி ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தால் செயற்படுத்தப்படுகிறது. 

அதற்கமைய, ஒரு உறுப்பினர் மரணித்தால் 02இலட்சம் ரூபாயும், திடீர் மரணம் ஏற்பட்டால் 06  இலட்ச ரூபாயும், முழுமையாக ஊனமுற்றால் நான்கு இலட்சம் ரூபாயும், கடுமையான நோய் காப்புறுதிக்கு மூன்று இலட்சம் ரூபாயும், வைத்தியசாலை  அனுமதிக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 1,50,000ரூபாயும், வெளிநோயாளர் சிகிச்சைக்கு ஆண்டுக்கு 15,000ரூபாய் வரையிலும் வழங்கப்படும்.

இலங்கை கலை மன்றத்தால் வெளியிடப்பட்ட 'கலை இதழ்' மற்றும் 'புத்தர் சிலை நிர்மாணக் கலை' ஆகிய நூல்களின் முதல் பிரதிகள் இலங்கை கலை மன்றத் தலைவர் பேராசிரியர் ஜயசேன கோட்டேகொடவினால் பிரதமருக்கு வழங்கப்பட்டன. 

ப்ரேக்ஷா விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதிகளை வழங்கும் திட்டத்தை குறிக்கும் வகையில் குறியீட்டு ரீதியாக  பிரதமரின் கரங்களினால் மேடை நாடக துறையின் சிரேஷ்ட கலைஞர்களுக்கு காப்புறுதி பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Thu, 03/18/2021 - 15:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை