பிம்ஸ்டெக் மாநாடு குறித்து போலி செய்திகள்

அமைச்சர் தினேஷ் விளக்கம்

ஜெனீவா மாநாடு நடைபெற்றுக்கொண்டிக்கு தருணத்தில் நாட்டை சிக்கலுக்குட்படுத்தும் நோக்கில் பிம்ஸ்டெக் மாநாடு தொடர்பில் போலியான செய்திகள் பரப்பப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், பிம்ஸ்டெக் என்பது பங்களாதேஷ், இந்தியா, பூட்டான், மியன்மார், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாகும். அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த மாநாட்டை நடத்த முடியும். எவரதும் இணக்கம் இல்லாவிட்டால் மாநாட்டை நடத்த முடியாது. சார்க் அமைப்புக்கும் இதுதான் நடந்துள்ளது. அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்காமையால் பல ஆண்டுகளாக சார்க் மாநாட்டை நடத்த முடியாது போயுள்ளது.

தவறான கருத்துகளை பிரசாரம் செய்யும் சில தரப்பினர் உள்ளனர். அவர்கள் எப்போதும் எமது தாய் நாட்டுக்கு எதிரானவர்களாவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன், பிம்ஸ்டெக் தலைமைத்துவத்தை தாய்லாந்துக்கு நாம் கொடுக்க வேண்டும். மாநாட்டை நடாத்திதான் அதனை கையளிக்க வேண்டும். மாநாட்டை நடத்த முடியாது போனால் தலைமைத்துவத்தில் இன்னும் சில மாதங்கள் இருப்பது குறித்து இலங்கை தீர்மானிக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறுவது இணைய வழியான மாநாடாகும். எவரும் இலங்கைக்கு வரப்போவதில்லை. எவரையும் நாம் அழைக்கவில்லை. மாநாட்டை பூட்டானிலுள்ள செயலாளர்தான் வழிநடத்துகிறார். பிம்ஸ்டெக்கின் தலைமையகம் பங்களாதேஷில் உள்ளது. ஆகவே, அதற்கு அப்பால் ஒன்றும் நடைபெறவில்லை. மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதுவர் தினமும் தமது செயற்பாடுகள் கொண்டுசெல்கிறார். தலைமைத்துவத்தை தாய்லாந்துக்கு கொடுக்க வேண்டிய காலத்திலேயே நாம் உள்ளோம்.

மியன்மார் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது எதிர்கால பிரச்சினையாகும் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 03/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை