கொரோனா முடக்கத்தை எதிர்த்து ஐரோப்பா எங்கும் ஆர்ப்பாட்டங்கள்

ஐரோப்பாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அங்கு முடக்கநிலைக்கு எதிராக பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஜெர்மனியின் கசெல் நகரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டதோடு முடக்கநிலை கட்டுப்பாடுகளை மீறியதாக லண்டன் நகரில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரியா, பெல்ஜியம், குரோசியா, பின்லாந்து, போலந்து, ருமேனியா, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

மூன்றாவது அலை கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய நாடுகள் போராடி வருகின்றன.

ஜெர்மனியின் மத்திய நகரான கசெல்லில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இதன்போது பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டத்தை எதிர்ப்போருடன் மோதலும் இடம்பெற்றது.

நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி முடக்கநிலைக்கு எதிராக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முகக்கவசம் அணிவது போன்ற நோய்க்கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளும் பின்பற்றப்படவில்லை.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட்டனர். இதன்போது பலரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியில் அண்மைய வாரங்களில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அரசு இந்த வாரம் முடிவெடுக்கவுள்ளது.

மறுபுறம் பிரிட்டனில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஒரு மாத முடக்க நிலைக்கு எதிராக லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கூட்டங்கள் கூடுவதற்கு தடை உள்ள நிலையில் அதனை மீறுபவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் அபராதங்களுக்கு முகம்கொடுக்கும் நிலை இருந்தது.

பின்லாந்து அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கும் நிலையில் தலைநகர் ஹெல்சிங்கியில் சுமார் 400 பேர் முகக்கவசம் கூட அணியாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய நகரங்களிலும் சிறிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை ருமேனியாவில் நோய்த் தொற்று அதிகரித்திருக்கும் வேளை, கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தலைநகர் புச்சரெஸ்டில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'தடுப்பூசியை நிறுத்து' மற்றும் 'சுதந்திரம் வேண்டும்' என்று அவர்கள் கோசம் எழுப்பினர்.

ஆஸ்திரியாவில் அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வியன்னா மத்திய ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 1,000 பேர் பேரணி நடத்தினர். முகக்கவசம் அணியாது மிக நெருக்கமாக இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் எச்சரித்தனர்.

சுவிட்சர்லாந்தின் பெசல் நகரின் தெற்காக 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லிஸ்டால் பகுதியில் 5,000க்கும் அதிகமானவர்கள் ஒன்றுதிரண்டு அமைதியான பேரணி நடத்தியுள்ளனர். பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாது இருந்ததோடு சிலர், 'தடுப்பூசி உயிராபத்துக் கொண்டது' என்ற பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

Mon, 03/22/2021 - 07:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை