கட்சியில் ஆதரவாளர்களின் செல்வாக்கு இருக்கும்வரை தலைமையில் இருப்பேன்

- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

கட்சியில் ஆதரவாளர்களுடைய செல்வாக்கும், நன்மதிப்பும் இருக்கும் வரைதான் கட்சித் தலைமையில் நான் இருப்பேன்  என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை எஸ்.ரி.ஆர். அமைப்பின் நான்காவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு  சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் அமைப்பின் தலைவர் யாத்தீக் இப்றாஹிம் தலைமையில் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில், கட்சியின் ஆதரவாளர்கள், அடிமட்ட போராளிகளின்  மன உணர்வுகள் சம்பந்தமான பெறுமானத்தை பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி, தலைமையும் சரி உணர்ந்து கொள்ள வேண்டும்.

கட்சியில்  பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் எதிர்கால அரசியலில் என்னால் எதுவித  பாதிப்புகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகவும் மௌனமாக இருந்து வந்துள்ளேன்.

பல்வேறு போராட்டங்களின் பின்னர் சர்வதேசத்தின் தலையீட்டினாலேயே   ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமை கிடைக்கப் பெற்றுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் இயக்கம் இந்த ஆட்சியாளர்களுடன் தேலையில்லாமல் முரண்பட்டு கொள்ளவுமில்லை. ஆனால் அவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் ஒருபோதும் இருக்கவும் போவதில்லை.

ஆட்சியாளர்களின் அனுசரணை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவோ இருக்கலாம் ஆனால் தமது பதவியில் நீடிக்க வேண்டுமாயின் கட்சி ஆதரவாளர்களின் செல்வாக்கும், நன்மதிப்பும்  தலைமையின் ஆசீர்வாதமும் இல்லாவிட்டால் தங்களின் நிலைமை என்னவென்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் முஸ்லிம் சமூகம் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமூகத்தை துன்புறுத்துவதில் அரசாங்கம் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. அந்த அளவுக்கு நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது  ஒரு சிலரின் அரசியல் நோக்கத்திற்காக இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதுதான் எங்களுக்கு மத்தியில் பேசப்படுகின்ற விடயமாகும்.

முஸ்லிம் காங்கிரஸ்  தனிநபர்களில் தங்கியிருக்கின்ற இயக்கமல்ல. எந்தவித எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்ற இளைஞர்களினதும், தாய்மார்களின் துஆக்களினாலும் வளர்க்கப்பட்ட இயக்கமாகும்.

எனவே, இந்த இயக்கத்தினுடைய பொறுப்பு என்பது சமூகத்தின் அவலங்களுக்கு தைரியமாக குரல்கொடுக்கின்ற திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்குகின்றவர்களாக இருக்கக் கூடாது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல். தவம், எம்.எஸ். உதுமாலெவ்வை, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்

Mon, 03/29/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை