ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்கா உலகில் தொடர்ந்து முன்னிலை

அமெரிக்கா கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச ஆயுத ஏற்றுமதியின் பங்கை 37 வீதம் அதிகரித்திருப்பதாக சுவீடனை தளமாகக் கொண்ட ஆய்வு நிறுவம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் சீனாவின் ஆயுத ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

பனிப்போருக்குப் பின்னர் ஆயுத ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உச்ச மட்டத்தை நெருங்கி இருப்பதோடு கொரோனா பெருந்தொற்றினால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படக் கூடும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஆயுத இறக்குமதியில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

“ஆயுத ஏற்றுமதியின் வேகமான வளர்ச்சி ஏற்பட்ட கடந்த இரண்டு தசாப்த காலத்தின் முடிவு இது என்று இப்போதே கூறமுடியாதுள்ளது” என்று இது பற்றிய தரவுகளை சேகரித்த ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் பீட்டர் வெசமன் தெரிவித்துள்ளார்.

“கொரோனா தொற்றினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக எதிர்வரும் ஆண்டுகளில் ஆயுத இறக்குமதி பற்றி சில நாடுகள் மீளாய்வு செய்யக்கூடும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் முந்தைய ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2016 மற்றும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் சர்வதேச ஆயுத விற்பனை ஸ்திர நிலையில் காணப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்க ஆயுத ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட (47 வீதம்) பாதி அளவானது மத்திய கிழக்கிற்கு சென்றுள்ளன. சவூதி அரேபியா மாத்திரம் அமெரிக்க மொத்த ஆயுத ஏற்றுமதியில் 24 வீதத்தை வாங்கியுள்ளது.

அமெரிக்கா தற்போது 96 நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கும் நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயுத விற்பனையில் அதன் சர்வதேச பங்கு அதிகரித்துள்ளது.

பிரான்ஸின் ஆயுத ஏற்றுமதி 44 வீதமாகவும் ஜெர்மனியின் விற்பனை 21 வீதமாகவும் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் தென்கொரியாவின் ஆயுத விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தபோதும் ஒப்பீட்டளவில் அந்த நாடுகளின் ஆயுத ஏற்றுமதி மிகக் குறைவாகவே உள்ளது.

இதில் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி வீழ்ச்சி கண்டபோதும் துணை சஹாரா ஆபிரிக்க நாடுகளுக்கு ஆதிக ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக இந்த இரு நாடுகளும் உள்ளன.

Tue, 03/16/2021 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை