நாட்டின் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான பொருட்கள் விற்பனைக்கு

தூதரகங்கள் ஊடாக உதவி பெறப்பட்டு உரிய விசாரணை

இலங்கையின் தேசிய கொடி பொறிக்கப்பட்ட கால் விரிப்புக்கள், மேசை விரிப்புக்கள் மற்றும் பாதணிகள் இணையவழி சந்தையில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அது தொடர்பாக சர்வதேச வர்த்தக சபையூடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். உலகின் முன்னணி இணையவழி சந்தையான அமேஸொனில் (Amazon) இலங்கை தேசியக் கொடியில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளாது அதனை உள்ளபடியே அச்சிட்டு தயாரிக்கப்பட்ட கம்பளம் ஒன்று 12 அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 2,500 இலங்கை ரூபா) விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்,     இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட கம்பளங்கள், பாதணிகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இவ் விடயம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் படங்கள் வைரலாகிய நிலையில் பலரும் தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இலங்கையின் கௌவரத்துக்குரிய தேசியக் கொடிக்கு இவ்வாறான அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது, இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இது தொடர்பாக உச்சளவில் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக இவ்வாறான உற்பத்திகள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டால் அது தொடர்பாக நாம் நேரடியாக தலையிட்டு சட்டநடவடிக்கை எடுப்போம்.ஆனால், தற்போது இவை சர்வதேச வர்த்தக சந்தைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு எதிராக சர்வதேச வர்த்தக சபை மற்றும், அந்தந்த நாட்டு தூதுவர்களூடாக தொடர்பு கொண்டு இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

 நமது நிருபர்

Sat, 03/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை