நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

ஈஸ்டர் குண்டு தாக்குதலினால் துயரப்படும் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு உயர்மறைமாவட்டத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த கருப்பு ஞாயிறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நேற்றைய தினம் கத்தோலிக்க ஆலயங்களில் இடம் பெற்ற நிலையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்கையிலேயே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே நாம் இத்தகைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கிறோம்.

ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதையே நாம் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் எதிர்பார்த்தோம். அந்த எதிர்பார்ப்பு எந்தளவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை எம்மால் தெரிவிக்க முடியாது.

ஆணைக்குழுவின் அறிக்கையை இந்நாட்களில் நான் கவனமாக வாசித்து வருகிறேன். அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவைகளில் பெருமளவானவை நடைமுறைப்படுத்தக் கூடியவையே. குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது முக்கியமாகும்.

நேர்மையான விசாரணை மேற்கொள்வதற்கு அரசாங்கம் இதனை விட மேலும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதே எமது கருத்து.

எனினும் நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேர் கொண்ட குழு அவசியம்தானா என்பதே எமது கேள்வி.

இது விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை ஜனாதிபதி நேரடியாகவே ஆக்கபூர்வமான தாக முன்னெடுக்க வேண்டும் என்பதே அவசியமாக உள்ளது.

ஒரு சாராரை மட்டும் தெரிவு செய்து அவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பது தவறானது.

எமக்கு உறுதியான சில அடையாளங்கள் வெளிப்படுத்தப்படும் வரை எமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடரும். எமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஏனைய மதங்களையும் இணைத்துக் கொள்வதே எமது எதிர்பார்ப்பு. இது முழு நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினையாகும் என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 03/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை