சீனி வரி குறைப்பினால் அரசுக்கு நிதி இழப்பு என்பது பொய்யானது

அடிப்படையற்ற குற்றச்சாட்டு; நாட்டு மக்களுக்கே அதிக பயன்   

சீனி இறக்குமதிக்கான வரி 25 சதமாக குறைக்கப்பட்டமையால் 1.59 பில்லியன் நிதி இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றதாகும். அரச வரிக் கொள்கையின் பிரகாரம் எவ்வித இழப்பும் ஏற்படவில்லையென்பதுடன் மக்களுக்கே வரி குறைப்பின் பயன் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல நேற்றுத் தெரிவித்தார்.

நிதி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சீனி இறக்குமதிக்கான வரி குறைப்பு நாட்டில் கடந்த சில தினங்களாக பேசுபொருளாகியுள்ளது. அரச வரிக் கொள்கை தொடர்பில் தெளிவில்லாதவர்கள்தான் இவ்வாறு கூறுகின்றனர். கால சூழ்நிலைகளுக்கேற்ப எந்தவொரு பொருளுக்கும் வரி குறைப்பை அல்லது அதிகரிப்பை அரசாங்கத்தால் மேற்கொள்ள முடியும்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி 50 ரூபாவாகவிருந்த சீனி இறக்குமதிக்கான வரி 25 சதமாக குறைக்கப்பட்டது. அத்தருணத்தில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாக இருந்தமையால் அத்தீர்மானத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சீனிக்கு மாத்திரமல்ல வெங்காயம், பருப்பு, டின் மீன் உட்பட 06 அத்தியாவசியப் பொருட்களுக்கு இறக்குமதி வரி 25 சதவீமாக குறைக்கப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உருளைக் கிழங்குக்கான வரி குறைக்கப்பட்டது.

இந்தத் தரவுகள் அடங்கிய அறிக்கையொன்றை பொது நிதிக்குழுக்கு நாம் அனுப்பியுள்ளோம். அதில் கூறப்பட்டுள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு சீனி இறக்குமதியில் அரசாங்கத்துக்கு 1.59 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறான எவ்வித இழப்பும் அரசாங்கத்துக்கு ஏற்படவில்லை.

கடந்த ஓக்டோபர் 13ஆம் திகதிமுதல் பெப்ரவரி 10ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 65,000 மெட்றிக்தொன் சீனியே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தினமும் 55 மெட்றிக்தொன் சீனி நுகரப்படுகிறது. ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி சீனி ஒரு கிலோவின் விலை 135 ரூபாவாகவிருந்தது. ஆனால், இன்று 114 ரூபாவாகவுள்ளது. வரி குறைப்பின் பயன் மக்களுக்கே சென்றடைந்துள்ளது. அதேபோன்று ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி சீனி ஒரு கிலோவின் சீ.ஐ.எப் விலை 72 ரூபாவாகவிருந்தது. ஆனால், தற்போது 90 ரூபாவாக உள்ளது. அவ்வாறெனின் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். என்றாலும் நாம் வழங்கியுள்ள வரி சலுகையால்தான் சீனியின் விலை குறைவாக உள்ளது.

06 பிரதான இறக்குமதியாளர்கள்தான் சீனியை இலங்கைக்கு இறக்குமதி செய்கின்றனர். அவர்கள்தான் சீனியின் விலையையும் நிர்ணயம் செய்கின்றனர். அதில் மாற்றுக்கருத்தில்லை. இவர்கள்தான் 2015ஆம் ஆண்டிலும் இருந்தனர்.

வரி குறைப்பு இடம்பெறுவது இது முதல் தடவையல்ல . பல சந்தர்ப்பங்களில் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் திகதி 30 ரூபாவாகவிருந்த சீனியின் வரியை 25 சதமாக குறைத்திருந்தனர். மீண்டும் இரண்டு மாதங்களில் சீனியின் வரியை 15 ரூபாவாக உயர்த்தியுள்ளனர். அத்தருணத்திலும் இந்த இறக்குமதியாளர்களே இருந்தனர். ஆகவே, சில சந்தர்ப்பங்களில் இறக்குமதியாளர்கள் பயனடையக்கூடும். அல்லது வரி குறைப்பு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதிகமாக சீனியை இறக்குமதி செய்யக்கூடும். என்றாலும் அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக்கொடுப்பதும் வாழ்க்கைச் செலவை குறைப்பதுமாகும்.

ஆகவே, சீனி இறக்குமதியில் அரசாங்கத்துக்கு எவ்வித இழப்பு ஏற்படவில்லை. வரி குறைப்பால் அரசாங்கத்துக்கு இழப்பு என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது மக்களுக்கு அது எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்ற அடிப்படையிலேயே அரச வரிக் கொள்கை அமையும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 03/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை