இந்தியா மீது இலங்கை தொடர்ந்தும் நம்பிக்கை

அநீதியான யோசனை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்

ஜெனீவா மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் எனவும் எமது நாட்டுக்கு அநீதியாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் சகல நாடுகளுக்கு விளக்கி வருகிறோம் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். அந்த நாடுகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் எனவும் சில தரப்பினர் டயஸ்போராவின் முன்னெடுப்புகளை ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெனீவா மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கை தொடர்பில் இரு அணிகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு சார்பாக சீனா உள்ளிட்ட நாடுகள் இருப்பதோடு இந்தியாவின் நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை. ஜெனீவா சவாலை அரசு எவ்வாறு முறியடிக்கப்போகிறது என வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், நான் எந்த நாட்டையும் ஒதுக்கவில்லை. எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்துள்ள பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் எமது நிலைப்பாட்டை கூறியுள்ளோம். இந்த யோசனை அநீதியானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த பிரேரணை அநீதியானது என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் அநீதியானது. இந்த அநீதியுடன் தொடர்புள்ள சகல தரப்பினருக்கும் அது தொடர்பில் விளக்கி வருகிறோம்.

ஆசியாவில் எமது நட்பு நாடாக இந்தியா காணப்படுகிறது. இந்த அநீதியில் இந்தியா பங்காளராகாது என முழுமையாக நம்புகிறோம். பரந்தளவில் நாம் எமது தரப்பு நியாயங்களை முன்வைத்திருக்கிறோம். இறுதி இரு வாரத்தில் மனித உரிமை ஆணையாளரின் கூற்று தொடர்பில் எமது கண்டனத்தை முன்வைக்கிறோம்.அவர் கூறியவை முற்றிலும் தவறானவை. புலிகள் வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கு செய்த அநீதியை நிறுத்தினோம். இதனால் அவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் கிடைத்த நன்மைகள் எண்ணிலடங்காது.

இதுவொன்றே குற்றச்சாட்டுகளை ஒதுக்க போதுமானவை. உண்மை வெல்லும் என்று நம்புகிறோம். மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது செய்த அவமானத்திற்குரிய செயற்பாட்டின் பலனை இன்று அனுபவிக்கிறோம். படையினர் யுத்த குற்றம்புரிந்ததாக ஏற்கும் பிரேரணையை மாற்றி திருத்தும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். உலகில் உள்ள பலமான பல நாடுகள் யதார்த்தத்தை உணர்ந்து ஏற்றுள்ளன. அந்த நாடுகள் எம்முடன் இணைந்து செயற்படுகையில் அரசியல் நோக்கத்திற்காக டயஸ்போராவின் தேவைப்படி செயற்படுவோர் குறித்தும் விளக்கியிருக்கிறோம். அவர்களின் தேவைகளையும் கூறியிருக்கிறோம். இந்தியா நியாயத்தின் பக்கம் இருக்கும் என முழுமையாக நம்புகிறோம். எம்முடன் சீனா, ரஷ்யா உட்டப பல நாடுகள் எமக்கு ஆதரவாக இருப்பதோடு எமக்காக குரல் கொடுப்பது தொடர்பில் நன்றி தெரிவிக்கிறோம். அவர்கள் நியாயத்தை ஏற்று செயற்படுகிறோம். அநீதிக்காக பங்களிக்காதீர்கள் என அநீதியின் பக்கமுள்ளவர்களிடம் ​கோருகிறோம் என்றார்.

கேள்வி: ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய பிரதமர் மோடியிடம் கடிதம் மூலம் அரசாங்கம் கோரியுள்ளது. இதற்கும் இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கும் தொடர்பிருக்கிறதா?

பதில். இரண்டும் வேறுபட்டவை. மனித உரிமை அமர்வில் இந்தியா நியாயமான பக்கத்தில் நிற்கும் என நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து எமக்கு ஆதரவு வழங்கும் என நம்புகிறோம். நாம் தெளிவான உண்மை நிலைமையை எடுத்துரைத்துள்ளோம்.

பயங்கரவாதிகளுடன் தான் யுத்தம் நடந்தது .யாழ்மக்கள்,பெற்றோர் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்.12-14 வயது பிள்ளைகள் பலாத்காரமாக படைக்கு சேர்க்கப்பட்டார்கள். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால் யாழ்ப்பாண பொதுமக்கள் நன்மையடைந்துள்ளனர். சில நாடுகள், புலிகள் மற்றும் டயஸ்போராவின் செயற்பாடுகளை ஆதரிக்கின்றன. உண்மையை உணர்ந்த நாடுகள் எமக்கு ஆதரவு வழங்கும். 13 ஆவது திருத்தம் குறித்து 1996 முதல் இந்திய ஒரே நிலைப்பாட்டில் உள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 03/03/2021 - 06:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை