மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு: பலரும் பலி

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதில் இராணுவம் இரண்டாவது நாளாகவும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக யங்கோன் நகரில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றை கலைப்பதற்கு பொலிஸார் ஸ்டன் குண்டுகளை பயன்படுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை என்று அவரது மகள் மற்றும் சகாக்கள் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றி, ஆளும் கட்சியின் தலைவரான ஆங்க சான் சூச்சி மற்றும் மூத்த உறுப்பினர்களை கைது செய்தது தொடக்கம் அந்நாட்டில் குழப்பம் நீடித்து வருகிறது.

ஆளும் கட்சி அமோக வெற்றியீட்டிய கடந்த நவம்பர் மாதத் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக குற்றம்சாட்டியே இரரணுவம் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 50 ஆண்டுகளாக இராணுவ ஆட்சி நீடித்த நிலையில் மியன்மார் ஜனநாயக வழிக்கு திரும்பும் செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே இந்த இராணுவ சதிப்புரட்சி உள்ளது. இதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.

“மியன்மார் ஒரு யுத்த பூமிபோல் உள்ளது” என்று பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நாட்டின் முதலாவது கத்தோலிக்க கருதினால் சார்ல்ஸ் மவுங்போ ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். கண்ணீர் புகைப்பிரயோகம் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கு முயற்சி தோல்வி அடைந்த நிலையில் யங்கோன் நகரின் பல பகுதிகளிலும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளன.

நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு நகரான டாவியிலும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூவர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்திருப்பதாக அரசியல்வாதியான கியோவ் மிக் ஹிடிக், ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் பொலிஸாரின் முயற்சியில் மன்டலாய் நகரிலும் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக இணைய செய்தி ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. பகோ மத்திய நகரில் இருவர் கொல்லப்பட்டிருப்பதாக தொண்டு அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

 

Mon, 03/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை