இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவு இன்று

நாளை காலிமுகத்திடலில் சாகச நிகழ்வு

இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கொழும்பு, கட்டுநாயக்க உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள 24 விமானப் படை முகாம்களில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4 மற்றும் 5ஆம் திகதிகளில் கொழும்பு காலி முகத்திடலில் வான் சாகசங்கள் பல காண்பிக்க  திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதில் இலங்கை விமானப் படையுடன் இந்திய விமானப் படையும் இணைந்து தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் இன்று (2) பிரதான மரியாதை அணிவகுப்பும் மார்ச் 05ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விமானப் படையின் ஜெட் மற்றும் எம் ஐ –17ரக ஹெலிகொப்டர் பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இம்முறை விமானப் படை நிகழ்வுகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தின் விமானப் படைத் தளபதிகள் வெளிநாட்டு அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளமை விஷேட அம்சமாகும். 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மார்ச் முதலாம் திகதி சமய வழிபாடுகளும், 02ஆம் திகதி பிரதான மரியாதை அணிவகுப்பும், 3ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு மாலை 5 மணிக்கு கொழும்பு காலி முகத்திடல் வான் பரப்பில் வான் சாகசங்கள் பல காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஸாதிக் சிஹான்

Tue, 03/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை