ஆப்கானில் 3 பெண் சுகாதார பணியாளர்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் மூன்று பெண் சுகாதார பணியாளர்கள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது மாகாண சுகாதார திணைக்கள தலைமையகத்தில் வெடிப்பு ஒன்று இடம்பெற்றபோதும் எவருக்கும் பாதிப்பு எற்படவில்லை. நன்கஹார் மாகாண சுகாதார திணைக்கள நுழைவாயிலில் நேற்றுக் காலை இந்த வெடிப்பு இடம்பெற்றதாக ஆப்கான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே காலப்பகுதியில் ஜலாலாபாத்தில் இரு வெவ்வேறு இடங்களில் தடுப்பு மருந்து பணியாளர்கள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரு தன்னார்வ தொண்டர்கள் மற்றும் போலியோ தடுப்புத் திட்டத்தின் கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பெண்களாவர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பில் தலிபான்கள் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆப்கான் மற்றும் அண்டை நாடான பாகிஸ்தானில் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் ஐந்து நாள் திட்டத்தின் இரண்டாவது நாளிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆப்கான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடந்த ஆண்டு பிற்பகுதியில் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் ஆப்கானில் படுகொலை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

Wed, 03/31/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை