மியன்மாரில் ஆர்ப்பாட்டங்களில் ஒரேநாளில் 38 பேர் சுட்டுக்கொலை

மியன்மாரில் ஒரு மாதத்திற்கு முன் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை இரத்தம் தோய்ந்த நாள் என்று ஐ.நா வர்ணித்துள்ளது. மியன்மாரில் இருந்து அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வெளியாவதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் கூறினார்.

பாதுகாப்புப் படையினர், இறப்பர் குண்டுகள் மற்றும் உண்மையான குண்டுகளால் சுட்டனர் என்று சாட்சிகள் கூறுகின்றன.

பெப்ரவரி 1ஆம் திகதி மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கமும், மக்கள் போராட்டமும் நடந்து வருகிறது.

இராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள். இராணுவப் புரட்சி நடந்தபோது இந்த தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த இராணுவப் புரட்சியும், அதைத் தொடர்ந்து போராட்டங்கள் பலவந்தமாக ஒடுக்கப்பட்டதும் சர்வதேசக் கண்டனங்களுக்கு உள்ளாயின. ஆனால், இவற்றை மியன்மார் இராணுவம் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

புதன்கிழமை நடந்த இறப்புகளைப் பார்த்த பின்னர், ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை நடத்த பிரிட்டன் அழைப்பு விடுத்திருப்பதோடு மியன்மார் இராணுவத்துக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி யோசித்து வருவதாகத் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இராணுவம் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும் என்று மியன்மாரின் அண்டை நாடுகள் கேட்டுக்கொண்டதற்கு மறுநாள் இப்படிப் போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னரான ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.

யாங்கோன் உள்ளிட்ட பல நகரங்களில் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மியன்மாரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களில் 14 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் அடக்கம் என்று சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு தெரிவித்துள்ளது. 19 வயது பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Fri, 03/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை