இவ்வருட பெரும்போகத்தில் 3.2 மில்லியன் மெற்றிக்தொன் நெல் அறுவடை

- அமைச்சு ஆலோசனைக் குழுவில்அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு

பெரும்போகத்தில் 7,42,000ஹெக்டெயரிலிருந்து 3.2மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைக்குமென எதிர்பார்ப்பதுடன், சிறுபோகத்தில் 1.8மில்லியன் மெற்றிக் தொன்னுமாக மொத்தம் 05மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடையை எதிர்பார்ப்பதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

மேலும் நெல் கொள்வனவு செய்யப்படும் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், விவசாயிகளுக்கு நேரடியாக பணத்தைக் கொடுத்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதன் ஊடாக இடைத்தரகர்களின் தலையீட்டை குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கமத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறுகையில்,

நாட்டிலுள்ள நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற போதும், மூன்றாவது தரப்பினரின் தலையீட்டின் காரணமாக நெல் விலையைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் காணப்படுகிறது.

இந்த நிலைமை ஏனைய பயிர் உற்பத்திகளுக்கும் பரவுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் இங்கு புலப்பட்டது. அரசாங்கம் என்ற ரீதியில் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள கமநல சேவைகள் மத்திய நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கான ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுக்கவுள்ளோம். எதிர்வரும் காலத்தில் இவற்றை நவீனமயப்படுத்துவதன் ஊடாக இந் நாட்டின் விவசாயத்துறையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கமைய இம் மத்திய நிலையங்களில் காணப்படும் குறைபாடுகளைத் தெரியப்படுத்துமாறு கோரியிருக்கிறோம். ஏற்கனவே கம்பஹா மாவட்ட கமநல சேவைகள் மத்திய நிலையத்தை நவீனமயப்படுத்த 4.2மில்லியன் ரூபா பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான காப்புறுதி முறையொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. இதுவரை 60 பயிர்களுக்கு இலவசமான காப்புறுதிகளை வழங்குகிறது. எஞ்சியவர்களுக்கு மாதாந்தம் 600 ரூபா என்ற குறைந்த கட்டணத்தில் காப்புறுதித் திட்டமொன்றை பெற்றுக் கொடுக்கவுள்ளோம் என்றார்.

Thu, 03/11/2021 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை