நைஜீரியாவில் மேலும் 30 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில் மேலும் ஒரு பாடசாலையில் 30 மாணவர்களை சமூகவிரோதக் கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

காடுனா மாகாணம், அபாகா நகரிலுள்ள பாடசாலைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த ஆயுதக் கும்பல், அங்கிருந்த 30 மாணவர்களைக் கடத்திச் சென்றது. கடத்தப்பட்ட மாணவர்களில் ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் அடங்குவர்.

மிக அதிக எண்ணிக்கையில் வந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஆயுதக் கும்பலுடன் போராடி, 180 மாணவர்கள் மற்றும் பாடசாலை பணியாளா்களை இராணுவம் மீட்டது.

இந்தச் சண்டையின்போது அதிகமான மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு இராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 279 மாணவிகளைக் கடத்திச் சென்ற அதே ஆயுதக் கும்பல்தான் தற்போது இந்தப் பாடசாலையில் இருந்து 30 மாணவர்களைக் கடத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, ஜம்பாரா மாகாண அரச பாடசாலையில் இருந்து கடந்த மாதம் 279 மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டனர். பின்னர் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களை விடுவிப்பதற்காக ஆயுதக் கும்பலுக்கு பிணைத் தொகை வழங்கப்பட்டதா என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

இந்தச் சூழலில், மீண்டும் அதே கும்பல் 30 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mon, 03/15/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை