தொழிலாளர்களுக்கு 300 நாட்கள் வேலை வழங்கியே ஆக வேண்டும்

மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை என்கிறார் செந்தில் தொண்டமான்

தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் குறைப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. வருடத்தில் 300 நாட்கள் வேலை வழங்க முடியாதென்றால், தோட்டக் கம்பனிகளிடமிருந்து 300 நாட்கள் எவ்வாறு வேலையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு தெரியும் என்று பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தொழிலாளர் உரிமைகள் பறிபோவதை இ.தொ.கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாவை வழங்க சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், வேலை நாட்களைக் குறைக்க அனுமதிக்க முடியாதெனவும் அவர் கூறினார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரையின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் செந்தில் தொண்டமான் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. முதலாளிமாரின் இவ்வாறான கடும்போக்கான செயற்பாடுகளே இன்று தொழிலாளர்களுக்கும், முகாமையாளர்களுக்குமிடையே மோதல்களை உருவாக்கியுள்ளன. தற்போது இது தொடர்பான முறைப்பாடுகள் பிரதமர், ஜனாதிபதி வரை எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றுக்கு கம்பனிகளே காரணமாகும். எனவே, தொழிலாளர்களுக்குரிய முறையான வேலை நாட்களை வழங்க வேண்டியது கம்பனிகளின் பொறுப்பு. இல்லையெனில், வேலை வழங்காத நாட்களில் தோட்ட முகாமையாளர்கள் கொழும்பிலேயே இருந்து கொள்வது உகந்ததாக இருக்கும். கம்பனி பக்கம் தவறுகளை வைத்துக் கொண்டு அவற்றை தொழிலாளர் மீது திணிக்கக் கூடாது.

 

Fri, 03/05/2021 - 06:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை