நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300 மாணவிகளும் விடுதலை

நைஜீரியாவில் பாடசாலை விடுதி ஒன்றில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வடமேற்கு மாநிலமான சம்பாராவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அந்த மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களை விடுவிப்பதற்கு மீட்புத் தொகை எதுவும் செலுத்தவில்லை என்றும் மாநில ஆளுநர் பெல்லோ மெட்டவாலே தெரிவித்தார்.

தொலைதூர கிராமமான ஜென்கபேவில் இருக்கும் பெண்கள் பாடசாலையில் 100க்கும் அதிகமான துப்பாக்கிதாரிகள் 317 சிறுமிகளை கடத்திச் சென்றதாக பொலிஸார் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர். எனினும் மொத்தம் 279 மாணவிகளே கடத்தப்பட்டதாக அளுநர் குறிப்பிட்டார்.

இவர்களை விடுவிப்பதற்கு கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்ட ஆயுததாரிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. நைஜீரியாவில் கடந்த மூன்று மாதங்களில் பாடசாலைகள் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதலாக இது இருந்தது.

வட மேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவில் மீட்புப் பணத்தை எதிர்பார்த்து ஆயுதம் ஏந்திய குற்ற கும்பல்கள் இவ்வாறான கடத்தல்களில் ஈடுபடுவது அண்மைய ஆண்டுகளில் வழக்கமாகி உள்ளது.

2016 ஆம் ஆண்டு இந்த பகுதிகளில் நைஜீரிய இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டு 2019 ஆம் ஆண்டில் இந்த கொள்ளைக் கும்பல்களுடன் அமைதி உடன்படிக்கை ஒன்றும் செய்துகொள்ளப்பட்டது. எனினும் தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

Wed, 03/03/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை