மியன்மாரில் தடுப்புக்காவலில் 2ஆவது கட்சி அதிகாரி மரணம்

மியன்மார் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பதவி கவிழ்க்கப்பட்ட ஆளும் தேசிய லீக் கட்சி அதிகாரி ஸாவ் மியாட் லின் உயிரிழந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை அதிகாலையில் இராணுவத்தால் ஸாவ் கைது செய்யப்பட்டார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உயிரிழந்த இரண்டாவது கட்சி அதிகாரியாக இவர் உள்ளார்.

“அவர் ஆர்ப்பாட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்” என்று அந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ மருத்துவமனையிலிருந்து ஸாவின் சடலத்தைப் பெற, அவரது உறவினர்கள் முயன்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது வயிற்றுப் பகுதியில் பெரிய காயம் ஒன்று இருப்பதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். எனினும் தடுப்புக் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயம் ஏற்பட்டிருப்பதாக இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

மியன்மாரில் அன்றாடம் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க, இராணுவம் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை அங்கு 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 1,800க்கும் மேற்பட்டோர் தடுத்துவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Thu, 03/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை