2021 தேசிய மீலாத் விழாவில் 100 குடும்பங்களுக்கு வீடுகள்

- அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எஸ்.பி.திஸாநாயக்க

2021ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழா இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, விசேடமாக வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற 100 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் 24 மாவட்டங்களில் தேசிய மீலாத் விழாக்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை தேசிய மீலாத் விழா இடம் பெறவில்லை. இதன் காரணமாக

இவ் வருடத்துக்கான (2021) தேசிய மீலாத் விழாவினை நுவரெலியா மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமரும் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ விடுத்த தீர்மானத்திற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நீதி அமைச்சர் அலி சப்ரி உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்

இந்த விழா சிறப்பாக நடாத்துவதற்கு போதிய இடவசதிகளைக் கொண்ட இடம் ஒன்றுதெரிவு செய்யப்பட வேண்டும்.

தற்பொழுது நுவரெலியா, கொத்மலை, ஹபுகஸ்தலாவ, தலவாக்கலை மற்றும் ஹற்றன் ஆகிய நான்கு நகரங்கள் முன் மொழியப்பட்டுள்ளன. இதில் ஒரு நகரம் தெரிவு செய்யப்பட்டு, அங்கு மீலாத் விழா நடாத்தப்படும்.

மீலாத் விழாவை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடுதல், இம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சரித்திரம் புகழ் பெற்ற பள்ளிவாசலொன்றை புனரமைத்தல், வறுமையான 100 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுத்தல், நுவரெலியா மாவட்டத்தில் உறுதி இல்லாத அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் உறுதிகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

Mon, 03/08/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை