கொவிட்-19: பிரேசிலில் தினசரி உயிரிழப்பில் சாதனை உச்சம்

பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கடந்த செவ்வாயன்று கொரோனா தொற்றில் 1,641 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது 2020 ஜூலை மாத பிற்பகுதியில் ஒரே நாளில் பதிவான 1,595 உயிரிழப்பு என்ற சாதனையை முறியடிப்பதாக உள்ளது.

பிரேசியிலில் இந்தப் பெருந்தொற்றினால் 257,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இது அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் அதிக உயிரிழப்பாக உள்ளது.

கொரோனா தொற்று பிரேசில் மருத்துவமனை கட்டமைப்பை சீர்குலையச் செய்திருக்கும் நிலையில் மத்திய அரசை மீறி தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு மாநில ஆளுநர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

பிரேசில் மத்திய அரசின் தடுப்பு மருந்துத் திட்டம் மந்தமாகச் செயற்படுவதை அடுத்தே மாநில அரசுகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

212 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் கொரோனா தொற்று ஆரம்பித்தது தொடக்கம் இதுவரை 10.6 மில்லியன் பேரிடம் அந்தத் தொற்று பரவியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை 59,925 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Thu, 03/04/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை