அமெரிக்க பேரங்காடியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

அமெரிக்காவின் கொலராடாவில் உள்ள பேரங்காடி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸார் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயத்திற்கு உள்ளான சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தையொட்டி அமெரிக்க ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், விலங்கிடப்பட்ட ஆடவர் இரத்தக் கறையுடன் அவசர உதவி வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரது காலில் அடிபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் துப்பாக்கிதாரி பேரங்காடிக்குள் நுழைந்து சரமாரியாக சுட ஆரம்பித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் யூடியுப் தளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலரும் காயமடைந்த நிலையில், அங்கு விரைந்த பொலிஸாருக்கும் துப்பாக்கிதாரிக்கும் இடையிலான மோதலின்போது பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து பொலிஸ் தலைமை அதிகாரி மொரிஸ் ஹெரால்ட் கூறும்போது, “பேரங்காடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் எங்களது பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். சந்தேக நபரை காயத்துடன் பிடித்துள்ளோம்” என்றார்.

சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டை ஏன் நடத்தினார், என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெறும் ஏழாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது உள்ளது. கடந்த மார்ச் 16 ஆம் திகதி அட்லாண்டாவில் மூன்று மசாஜ் நிலையங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.

Wed, 03/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை