வருட இறுதிக்குள் 100,000 உரிமை பத்திரங்களை வழங்க நடவடிக்கை

தெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கும் வைபவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிக்கல் இல்லாத காணி உரிமையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் அரச காணிகள் கட்டளைச் சட்ட ஏற்பாடுகளின் கீழ், முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் சட்டபூர்வமாக தெரிவுசெய்யப்பட்ட 20,000 பேருக்கு முதல் கட்டத்தின் கீழ் உரிமை பத்திரங்கள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் ஊடாக விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையை வழங்குவதன் மூலம் அவர்களின் வருமான மட்டத்தை அதிகரிக்க நேரடி அதிகாரத்தை வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

உரிமைப் பத்திரங்களை பெறுபவர்கள் தங்கள் காணிகளை வீடொன்றை கட்ட, விவசாய நோக்கங்களுக்காக மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம். காணி உரிமையைப் பெறுபவர்கள் பயனுள்ள காணிப் பயன்பாட்டின் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியினால் வழங்கப்படும் இந்த உறுதிப் பத்திரம் அறுதி உறுதிப் பத்திரமாக கருதப்படும். பயனாளிகளுக்கு அதனை பிணையமாக வைத்து வங்கிக் கடனொன்றை பெற்றுக்கொள்ளவும் உரிமை உண்டு. இந்த ஆண்டு இறுதிக்குள் 100,000 உரிமை பத்திரங்களை வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில், அனைத்து மாகாணங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 பேருக்கு ஜனாதிபதி உரிமைப் பத்திரங்களை வழங்கினார். ஜனாதிபதி அலுவலகம், காணி அமைச்சு மற்றும் மகாவலி அமைச்சு இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான சிரிபால கம்லத், அனுராத ஜயரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tue, 03/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை