இரு வாரங்களில் மேலும் 05 இலட்சம் தடுப்பூசிகள்

ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவிப்பு

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் - வீ தடுப்பூசியை இலங்கை அவசரகாலப் பயன்பாட்டுக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதுடன் விரைவில் ஸ்புட்னிக் - வி தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக கிடைக்குமென ஜனாதிபதியின் மூத்த ஆலோசகரும் கொவிட்19 தடுப்பூசிக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதியிடம் ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியைக் கோரியிருந்தார். அதன் பிரகாரம் முதல் தொகுதி ஸ்புட்னிக் - வி தடுப்பூசி விரைவில் இலங்கையை வந்தடையவுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி இலங்கைக்கு ரஷ்யாவால் நன்கொடையாகவே வழங்கப்படுகிறது.

கோவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்ட 2,64,000 தடுப்பூசிகள் செலுத்தப்படும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களின் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும். உலக முன்னுரிமை பட்டியலின் படி, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளனர். ஆனால் இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 9.1 சதவீதமானவர்கள் மாத்திரமே கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவொரு தடுப்பூசியும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தடுப்பூசிக்கு முன்னர் நிறைய ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஆராய்ச்சி முடிவுகளும் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளன. தடுப்பூசி எந்தவித ஆபத்தான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதுவரை நம் நாட்டில் ஒரு சில ஒவ்வாமைகளைத் தவிர கடுமையான ஒவ்வாமை என எவ்வித முறைப்பாடும் பதிவாகவில்லை. காய்ச்சல், உடல் வலி போன்ற சிறிய பக்க விளைவுகள் ஏற்படுவது சாதாரணமானது என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 03/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை