சுமந்திரனுக்கு STF பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும்

- பாராளுமன்றில் சஜித், ஹக்கீம், சரத் பொன்சேகா சபாநாயகரிடம் கோரிக்கை

பேரணியில் கலந்துகொண்ட காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மீண்டும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அவரது உயிர்பாதுகாப்பை கருத்திற்கொண்டே விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர் பாதயாத்திரை சென்றதை அடிப்படையாகக் கொண்டு அவரது பாதுகாப்பை நீக்குவது ஒழுக்கமான செயலல்ல. அதனால் அவருக்கு இருந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கையின் பிரகாரமே அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவருக்கு இரண்டு பக்கங்களிலும் அச்சுறுத்தல் காணப்பட்டது.

தற்போதுள்ள நிலைமை அவரது உயிருக்கும் மிகவும் அச்சுறுத்தலாகும். அதனால் அவரது பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சபாநாயகராகிய உங்களுக்கு உள்ளது.

அதனால் நீங்கள் அது தொடர்பான அறிவிப்பொன்றை பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கவேண்டும் என்றார்.

அதனைத் தொடந்து எழுந்த சரத்பொன்சேகா தெரிவிக்கையில், நீதிமன்ற உத்தரவை மீறி பேரணி நடத்தியதாக தெரிவித்தும் பயங்கரவாதிகளுக்காக முன்னின்று செயற்பட்டாரென்ற காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

பேரணியை தடைசெய்யக்கோரி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருக்கவில்லையென்றே நினைக்கிறேன்.

மாறாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்தே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருக்கின்றது.

அத்துடன் பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து அவரது பாதுகாப்பை நீக்குவதாக இருந்தால், எமது பொலிஸ், இராணுவத்தினரை கொலை செய்த கருணா, பிள்ளையானுக்கு எவ்வாறு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியும்? பிள்ளையானை சுற்றி இராணுவத்தினர் இருப்பதை காணும்போது எமக்கு வெட்கமாக உள்ளது.

சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர்.

அதனால் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பை நீக்குவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Thu, 02/11/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை