PCR பரிசோதனை இயந்திரங்களுக்கு நாட்டில் எத்தகைய தட்டுப்பாடும் இல்லை

பிசிஆர் பரிசோதனை உபகரணங்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். பரிசோதனைகள் மேற்கொள்பவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வது குறைவடைந்துள்ளதே தவிர பிசிஆர் பரிசோதனை உபகரணங்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

அன்றாடம் நாட்டில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் கடந்த சில தினங்களாக குறைவடைந்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் முதல் பகுதியில் 18 ஆயிரமாக இருந்த பிசிஆர் பரிசோதனை கடந்த சில தினங்களாக 15 ஆயிரமாக குறைவடைந்துள்ளன.

இரசாயன கூட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆறு இரசாயன கூட ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அங்குள்ள இரசாயன கூடத்தில் பெருமளவு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன எனினும் தற்போது அவை குறைவடைந்துள்ளன. அதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளும் குறைவடைந்துள்ளன. ஏனெனில் அந்த பல்கலைக்கழகத்தின் இரசாயன பிரிவினர் வேறு ஆராய்ச்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அந்த நிலையை சீர் செய்வதற்கு ஏனைய இரசாயன கூடங்கள் ஊடாக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

நாளாந்தம் பரிசோதனைக்கான மாதிரிகள் அதிகரித்து செல்கின்ற நிலையிலும் பிசிஆர் பரிசோதனை அறிக்கைகள் வினியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன. அந்த நிலை தற்போது சீர் செய்யப்பட்டு வருகிறது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

- லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 02/08/2021 - 07:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை