வடமாகாணத்திற்கு உட்பட்ட COVID-19 தடுப்பு செயலணி கலந்துரையாடல்

வடமாகாணத்திற்கு உட்பட்ட covid-19 தடுப்பு செயலணி மற்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல், வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் நேற்று காலை 1௦.3௦ மணியளவில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில், தற்போதுள்ள covid-19 இடர்நிலை pcr பரிசோதனை செய்யப்படும் நிலையங்கள், கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியவர்களுடைய எண்ணிக்கை அவர்களுடைய தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்டமாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள உள்ளோரின் விபரம் என்பன சுகாதார துறையின் மாகாண பணிப்பாளரினால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர்,

6௦ வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் பொழுது, பெருமளவு மக்கள் ஒன்றுகூடாத வண்ணம் அவர்களுடைய வயதெல்லைக்கு ஏற்ப திகதி, நேரம் மற்றும் இடம் என்பவற்றை முன்கூட்டியே அறிவித்து செயற்படுமாறு தெரிவித்ததோடு, கொரோனா தடுப்பூசி பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்குமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், முகக்கவசங்களை அணியாதவர்களுக்கும், அதனை முறையான விதத்தில் அணியாதவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் காவற்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் இனிவரும் காலங்களில் மதம் சார்பான விழாக்கள் மற்றும் பண்டிகைகள் அதிகமாக வர இருப்பதால் சுகாதார துறை, காவற்துறை, முப்படையினர் போன்றோர் மத தலைவர்களுடனான ஒரு கலந்துரையாடலினை நடாத்தி ஒழுங்குமுறை ஒன்றினை வகுத்து வடமாகாணம் முழுவதும் அதனை நடைமுறைபடுத்துமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், வரும் மாதம் சாதாரண தர பரீட்சை நடைபெற உள்ளதை நினைவுபடுத்திய ஆளுநர், பரீட்சை நிலையங்களுக்கான தொற்று நீக்கும் நடவடிக்கை மற்றும் மாணவர்களின் சுகாதாரத்தினை கவனத்தில் கொள்ளுமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் பற்றி 5 மாவட்ட காவற்துறை அதிகாரிகளும் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.

அதற்கு பதிலுரைத்த ஆளுநர்,

சட்டத்துக்கு புறம்பான மண் அகழ்வு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியதோடு, குறிப்பாக மல்வத்து ஓயா பகுதியில் நடைபெறும் அனைத்து மண் அகழ்வு பணிகளையும் உடனடியாக நிறுத்துமாறு மன்னார் அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டார். மேலும் குழு ஒன்றை நியமித்து அங்கு சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Thu, 02/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை