Header Ads

தைரியத்துடன் முன்வந்து தீர்மானங்களை எடுக்கவும்

- ஜனாதிபதிக்கு இம்தியாஸ் எம்.பி கடிதம்

இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரியும் தீயை அணைக்க அவசியமான தீர்மானங்களை எடுக்க தைரியமாக முன் வரவேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் இக்கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இன்று எமது தாய் நாடு பொருளாதார, சுகாதார துறைகளில் மாத்திரமின்றி, சமூக ரீதியாகவும் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. இவ்வாறாக பல பாரதூரமான சவால்களுக்கு முகங்கொடுத்து கடந்து சென்ற பல சந்தர்ப்பங்கள் எமது கடந்த கால வரலாற்றில் இடம்பெற்றிருந்தன.

இவை அனைத்தையும் விட 73 வருடங்களுக்கு முன்னர் , எமது தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட போராட்டமானது, நாம் எதிர் கொண்ட ஏனைய சவால்களையும் விட பிரமாண்டமானதும் தீர்க்கமானதுமாகும்.

எமது நாடு முன்னோக்கிச் செல்கின்ற திசை, எதிர்கால சந்ததிகளுக்கு கையளிக்கப் போகும் நாடு என்பன தொடர்பாக இந்த சுதந்திரம் கிடைத்த 7 தசாப்தங்களாக பல சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. எதிர்கால சந்ததிகளுக்கு கையளிக்கப் போகும் இந்த நாடு குறித்த எமது கனவுகளும் அபிலாஷைகளும் அன்று போலவே இன்றும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக மழுங்கடிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியதாகும்.

நான் கல்வி கற்ற கத்தோலிக்க, முஸ்லிம், பௌத்த பாடசாலைகள் ஊடாக எனக்குக் கிடைத்த உத்வேகத்தையும் தூரநோக்கையும் அடிப்படையாகக் கொண்டு, நான் அனைத்து இன மக்களையும் ஒரே தரத்தில் வைத்து நோக்கக் கூடிய உன்னத சமூகமொன்றை தோற்றுவிப்பதற்காக எனது மாணவப் பருவத்திலிருந்தே அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றேன்.

பல்லின சமூகங்களின் பன்முகத்தன்மையை புரிந்து கொள்ளக்கூடிய, பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்கின்ற, பன்முகத்தன்மையை ஒரு சுமையாகக் கொள்ளாமல் அதனை ஒரு வளமாக கருதக் கூடிய சிறந்த சமூகமொன்றை தோற்றுவிப்பதற்கான பணியில் எனது சக்திக்கு உட்பட்ட வகையில் செயல்பட்டு வருகிறேன். எனது தந்தை மரணித்ததிலிருந்து இரண்டு தசாப்தங்களாக குறுகிய அரசியல் நோக்கங்களின்றி, தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தின் ஊடாக இதற்கான பங்களிப்புகளை செய்து வருகிறோம்.

இவ்வாறாக பல்லின சமூகங்களின் பன்முகத்தன்மை ஊடாக தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் அனைவரும் உருவாக்க விரும்பும் சுபீட்சமான இலங்கைக்குத் தேவையான அடித்தளத்தை அமைக்க முடியுமென்பது எனது நம்பிக்கையாகும்.

எமது நாடு எதிர்கொண்டிருக்கின்ற சவால்களை வெற்றி கொள்ள தேவையான முயற்சிகளை பலவீனப்படுத்தும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இன்று அதிகரித்துள்ளமை கவலைக்குரியதாகும்.

மரணித்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? என்ற விடயம் தொடர்பாக தற்போது இடம்பெற்று வரும் வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும், முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ள மருத்து, விஞ்ஞான அடிப்படையிலன்றி, வெறும் குறுகிய அரசியல் முகாம்களை மையப்படுத்தியவைகளாகும். இதன் மூலம் எமது மக்களிடையே மென்மேலும் பிரிவினைகள் தோற்றம் பெற வழிவகுக்கும்.

ஜனநாயகம், மனித உரிமை என்பன குறித்து அதிக கரிசனை செலுத்தும் ஓர் உலகிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜனநாயக விழுமியங்கள், அவை குறித்து பொறுப்புக் கூறல் என்பன தொடர்பாக சர்வதேச சமூகம் எமக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்குப் பதிலாக, உலகம் எம்மை முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடிய வகையில் ஜனநாயக விழுமியங்கள் கொண்ட சமூகமாக தோற்றம் பெறுவது இன்றியமையாததாகும்.

எமது மக்களை மென்மேலும் பிளவுபடுத்தும் சக்திகளையும் காரணிகளையும் தோற்கடிக்க வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றுக்கு மதிப்பளிக்காமை என்ற காரணத்தால் எமது நாடும் மக்களும் சர்வதேச சமூகங்களால் தனிமைப்படுத்தும் நிலை தோற்றம் பெறாமல் பாதுகாக்க வேண்டியதும் எமது கடமையாகும்.

அன்று டீ.எஸ்.சேனநாயக்க போன்ற எமது தேசிய வீரர்கள் சென்ற வழியைப் பின்பற்றி, சுபீட்சத்தையும் பல்லின பன்முகத்தன்மையையும் கொண்ட ஜனநாயக இலங்கையை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க பங்களிப்பு செய்யுமாறு வேண்டுவதோடு , இன்று இலங்கையர்களின் உள்ளங்களில் பற்றி எரியும் தீயை அணைக்க அவசியமான தீர்மானங்களை எடுக்க தைரியமாக முன் வருமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 02/04/2021 - 10:26


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.