மியன்மாரின் இராணுவ ஆட்சி நாட்டில் பிடியை இறுக்குகிறது

ஆளும் கட்சியின் மூத்த தலைவர் கைது

மியன்மாரின் இராணுவ ஆட்சி தனது அதிகாரப் பிடியை இறுக்கும் வகையில் பதவி கவிழ்க்கப்பட்ட ஆங் சான் சூச்சியின் ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் மூத்த தலைவர் வின் ஹிடைனை நேற்று கைது செய்தது.

யங்கோனில் இருக்கும் தனது வீட்டில் இருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தேசத்துரோக சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இராணுவம் ஆட்சி கவிழ்ப்பை மேற்கொண்ட கடந்த திங்கட்கிழமை தொடக்கம் சூச்சி மற்றும் ஏனைய சிவில் அரசின் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது அந்நாட்டில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் எங்கே உள்ளனர் என்பது இன்னும் தெரியாதுள்ளது.

கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூச்சியின் ஆளும் கட்சி அமோக வெற்றியீட்டியதில் மோசடி இருப்பதாகக் கூறியே இராணுவம் இந்த சதிப்புரட்சியில் ஈடுபட்டுள்ளது.

இராணுவத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வியாழக்கிழமை ஆற்றிய தனது வெளிநாட்டுக் கொள்கை பற்றிய முதல் உரையில், மியன்மார் இராணுவம் அதிகாரத்தை கைவிட்டு கைதுசெய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை விடுவிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்ட மியன்மார் மீது கடுமையான தடைகளை கொண்டுவருவது பற்றி அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மியன்மாரில் மக்கள் போராட்டங்களும் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 02/06/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை