இரத்தினபுரி மாநகர பஸ்தரிப்பு நிலையங்களில் மலசலகூட வசதி இன்மையால் பயணிகள் அசெளகரியம்

இரத்தினபுரி மாநகர எல்லைக்குட்பட்ட பஸ்தரிப்பு நிலையத்தில் பயணிகளின் அடிப்படைத் தேவையான மலசலகூடவசதி இன்மையால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தூர பஸ் சேவைகளுக்காகக் காத்திருக்கும் பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இரத்தினபுரி நகரசபைக்குட்பட்ட செலான் சந்தி, கொடிகமுவ (பாலம்) சந்தி, இரத்தினபுரி பாணந்துறை வீதி சந்தி, பொலிஸ் நிலையம் (விளையாட்டு மைதானம்) முன் ஆகிய இடங்களில் காணப்படும் பஸ்தரிப்பு நிலையங்களிலேயே இந்நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பஸ் தரிப்பு நிலையங்களில் தூர இடங்களான பண்டாரவளை, பதுளை, எம்பிலிப்பிட்டிய, அம்பாறை மற்றும் கொழும்பு வரையிலான இடங்களுக்கு பயணிக்க கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பலர் நீண்டநேரம் காத்திருப்பதால் அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். இதனால் இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்திலுள்ள மலசல கூடங்களை நாடி வரவேண்டிய நிலைமை ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்துடன் இந்நிலைமையால் பஸ் தரிப்பு நிலையங்களை அண்மித்த இடங்கள் அசுத்தமடைந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி பொதுமக்கள் பெரும் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவே இவ்விடயத்தில் இரத்தினபுரி மாநகர சபை அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். நீண்டகாலமாக இவ்விடயம் குறித்து மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளின் அவதானத்துக்கு கொண்டு வந்த போதிலும் இவ்விடயம் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நகரவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(இரத்தினபுரி மேலதிக நிருபர்)

Fri, 02/12/2021 - 17:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை