உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் இங்கு மாற்றமில்லை

பாராளுமன்றத்தில் அமைச்சர் உதய கம்மன்பில

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்தாலும் இலங்கையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு இடம்பெறாதென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, விலை சூத்திரத்தின் ஊடாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் அதன் சுமையை மக்கள் மீது சுமத்துவதே கடந்த அரசாங்கத்தின் கொள்கையாகவிருந்தது.

மேற்கத்தேய நாடுகளை போன்ற மனநிலையில் இருந்த கடந்த அரசாங்கம் அங்கு தினமும் எரிபொருள் விலைகளில் மாற்றமடையும் கொள்கையை கடைப்பிடிப்பது போன்று இங்கும் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையில் மாற்றமடையும் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தினர்.

மக்களின் வருமானத்தில் பெரும்பகுதியை அதிகமாக அன்றாட வாழ்வாதாரத்துக்கு செலவழிக்கும் எம்மை போன்ற நாடுகளுக்கு இந்தக் கொள்கை ஏற்புடையதல்ல. தொடர்ச்சியாக எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் மக்களின் வாழ்க்கை சுமையும் அதிகரிக்கும். உற்பத்திகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் நிலையான விலையொன்று எரிபொருளுக்கு இருக்க வேண்டும்.

அதன் பிரகாரமே கடந்த ஒன்றரை வருடமாக நாம் எரிபொருள் விலையில் மாற்றங்களை மேற்கொள்ளவில்லை. 2019ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் முதலாம் திகதிதான் கடைசியாக எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு பீப்பா மசகு எண்ணெயின் விலை 60 டொலர்களாகும்.

ஆனால், இப்போது 64 டொலர்கள்வரை உயர்வடைந்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் விலை சூத்திரத்தின் பிரகாரம் செயற்பட்டால் தற்போது நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 02/24/2021 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை