Header Ads

கிழக்கில் பல பிரதேசங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிப்பு

- கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர்

கிழக்கு மாகாணத்தில் நேற்றுமுன்தினம் (07) வரை 2536 பேர் கொவிட் -19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் தொற்றினால் 16 மரணங்கள் சம்பவித்துள்ளன.

தற்பொழுது 265 சிகிச்சை பெற்று வருகின்றனர். 2278 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் 486 பேரும் மட்டக்களப்பு மவாட்டத்தில் 619 பேரும், அம்பாறை பிராந்தித்தில் 175 பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 1256 பேரும், பேலியகொட மீன்சந்தை கொத்தணியின் பின்னர் கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

தற்போது ஆங்காங்கே தொற்று உள்ளவர்கள் எம்மால் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த தொற்றுடைய தாக்கமும் முற்றாக கிழக்கு மாகாணத்தை விட்டு நீங்கவில்லை. எதிர்வருகின்ற காலத்தில் எம்மால் வழங்கப்படுகின்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் தொற்று ஏற்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

மக்களுடைய நடமாட்டம் பரவலாகக் காணப்படுவதனால் எந்த வகையிலும் இத்தொற்று கிழக்கு மாகாணத்திற்கு வருவதற்குரிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் 4 பிராந்தியங்கள் ஊடாக 14,000 பேருக்கு இந்த தடுப்பூசியை வழங்கியிருந்தோம். அது கிழக்கிலுள்ள 46 சுகாதார சிகிச்சை நிலையங்களிலும் மத்திய அரசு மற்றும் மாகாண சபைக்குட்பட்ட வைத்திசாலைகளிலும் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த தடுப்பூசி ஏற்றிய பின்னர் எவருக்கும் எதுவித பாரிய பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. ஆகவே இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளோம்.

காத்தான்குடியில் ஒரு சில வீதிகளைத் தவிர்த்து ஏனைய வீதிகளை தனிமைப்படுத்தலிலிருந்து அகற்றலாம் என எமது தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது. அதனை நாம் சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ளோம்.

அவ்வாறு தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டாலும் கொவிட் - 19 உடைய தாக்கம் முற்றுமுழுதாக நீங்கவில்லை. எனவே மக்கள் எம்மால் வழங்கப்படுகின்ற சுகாதார வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்றார்.

பெரியபோரதீவு தினகரன், கல்லடி குறூப், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்

Tue, 02/09/2021 - 13:32


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.