சட்டப்படி வேலை போராட்டம் கைவிடப்பட்டது

கொழும்பு துறைமுக ஊழியர்களின் சட்டப்படி வேலை போராட்டம் நேற்று கைவிடப்பட்டது. நேற்றைய தினம் அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து முற்பகல் 10. 30 மணியளவில் சட்டப்படி வேலைப் போராட்டத்தை கைவிட்டதாக துறைமுக ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் நூற்றுக்கு நூறு வீதம் துறைமுக அதிகார சபையின் கீழ் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதையடுத்து தமது சட்டப்படி வேலை போராட்டத்தை கைவிட்டதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சில தினங்களாக கொழும்பு துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை போராட்டத்தை மேற்கொண்டனர். அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்றுமுன்தினம் மேற்படி தொழிற்சங்கத்தினருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் நூற்றுக்கு நூறு வீதம் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படுமென அவர் உறுதியளித்தார். அத்துடன் அது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் பெறப்படுமென்றும் அவர் தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்தார். அதனையடுத்து நேற்றையதினம் அமைச்சரவை முடிவுகளை வெளியிடப்பட்ட நிலையில் துறைமுக ஊழியர்கள் மேற்கொண்ட சட்டப்படி வேலை போராட்டத் தை கைவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 02/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை