நாசாவின் ஆய்வுக்கலன் செவ்வாயில் தரையிறக்கம்: உயிர்கள் பற்றி ஆய்வு

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பெர்சவரன்ஸ் ஆய்வுக்கலன் செவ்வாய் கிரகத்தில் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாயின் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஜேசேரோ என்று அழைக்கப்படும் ஆழமான பள்ளத்தாக்கு ஒன்றிலேயே அது தரையிறங்கியது.

“நல்ல செய்தி என்னவென்றால், இந்த ஆய்வுக்கலன் நல்ல நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று இந்தத் திட்டத்தின் பிரதித் திட்ட முகாமையாளர் மெட் வொல்லஸ் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கலன் செவ்வாயை தொட்டது உறுதியானபோது கலிபோர்னியாவில் இருக்கும் நாசாவின் திட்டக் கட்டுப்பாட்டகத்தில் பொரியியலாளர்கள் கரகோசம் இட்டு தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர்.

ஆறு சக்கரங்கள் கொண்ட இந்த வாகனம் குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகள் செவ்வாயின் பாறையில் துளையிட்டு கடந்த காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை திரட்டவுள்ளது.

ஜேசேரோ என்ற பகுதியில் பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பாரிய ஏரி ஒன்று இருந்ததாக நம்பப்படுகிறது. அங்கு நீர் இருந்தால் உயிரினங்கள் இருக்க சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆய்வுக்கலன் செவ்வாயில் தரையிறங்கிய பின் அங்கிருந்து இரு படங்களை வெளியிட்டது விஞ்ஞானிகளிடையே ஆர்வத்தைத் தூண்டியது.

“இப்போது வரை ஆய்வுக்கலன் சமதளத்தில் தான் உள்ளது. இதுவரை 1.2 டிகிரி தான் சாய்ந்துள்ளது” என அது தரையிறங்கும் அணியின் தலைவர் அலன் சென் குறிப்பிட்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு கியூரியோசிட்டி ஆய்வுக்கலன், செவ்வாய் கிரகத்தின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பெர்சவரன்ஸ் ஆய்வுக்கலனின் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், அடுத்த சில வாரங்களில் அது எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள்.

இனி வருங்காலத்தில், பெர்சவரன்ஸ் அதிக படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கலாம்.

பெர்சவரன்ஸ் ஆய்வுக்கலன் தன்னோடு ஒரு சிறிய ஹெலிகொப்டரை எடுத்துச் சென்றுள்ளது. விரைவில் செவ்வாய் கிரகத்தின் ஹெலிகொப்டர் பறக்க விடும் சோதனை நடைபெறும். இப்படி வேறொரு கிரகத்தில் மனிதர்கள் ஹெலிகொப்டரை பறக்கவிட முயற்சிப்பது இதுவே முதல் முறை. அதன் பின்னர் தான் பெர்சவரன்ஸ் ஆய்வுக்கலனின் முக்கியப் பணிகள் ஆரம்பமாகும்.

பெர்சவரன்ஸ் ஆய்வுக்கலன் செவ்வாய் கிரகத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் இருந்து மாதிரிகளைச் சேமிக்கும், அதன் பின் பெரிய பள்ளத்தின் விளிம்பை நோக்கி நகரும். இந்த பெரிய பள்ளத்தின் விளிம்பில் தான் கார்பனேட் பாறைகள் இருப்பதாகச் செயற்கைக் கோள்கள் கண்டுபிடித்துள்ளன. இந்த பாறைகளைக் கொண்டு உயிரியல் ரீதியிலான நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்கலாம்.

Sat, 02/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை