ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா பரவியிருக்க சாத்தியம் இல்லை

- சர்வதேச நிபுணர் குழு உறுதி

கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றி சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு நடத்திய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு, சீனாவின் ஆய்வுகூடம் ஒன்றில் இருந்து இந்த வைரஸ் பரவியதான கூற்றை நிராகரித்துள்ளது.

வூஹான் நகர ஆய்வு கூடத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்தது என்பது “மிகவும் அசாத்தியமானது” என்று இந்தத் திட்டத்தின் தலைவர் பீட்டர் பென் எம்பரக் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸின் மூலத்தை அடையாளம் காண்பதற்கு மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விசாரணை தற்போது தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அவதானம் செலுத்தி இருப்பதாக இந்த நிபுணர் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிபுணர் குழுவின் தற்போதைய விசாரணைகள் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

சீனாவின் மத்திய ஹுபெய் மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரிலேயே கடந்த 2019 இறுதியில் கொவிட்–19 தொற்று முதல் முறை அடையாளம் காணப்பட்டது. அது தொடக்கம் உலகெங்கும் பரவிய இந்த வைரஸினால் 106 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதோடு 2.3 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய டொக்டர் எம்பரக், இந்த விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்தபோதும், இந்த தொற்று பற்றி திடீர் திருப்பங்களை ஏற்படுத்தும் விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்த தொற்று விலங்குகளில் இருந்தே மனிதனுக்கு தொற்றி இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றபோதும், அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரியாதுள்ளது.

கொவிட்–19 வைரஸ் வெளவாலிடம் இயற்கையாக இருந்தபோதும் அது வூஹானில் பரவி இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று டொக்டர் எம்பரக் சுட்டிக்காட்டினார்.

விலங்குகளின் வழி இந்த வைரஸ் பரவிய விதம் பற்றி இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக குறிப்பிட்ட அவர், அது இடைநிலை உயிரினம் ஒன்றில் இருந்து மனிதனுக்கு பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

Thu, 02/11/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை