வூஹான் ஆராய்ச்சிக் கூடத்திற்கு சர்வதேச நிபுணர் குழு பயணம்

கொரோனா முதல் முதலில் பரவ ஆரம்பித்த சீனாவின் வூஹான் நகரிலுள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு நேற்று புதன்கிழமை ஆய்வு செய்தது.

இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்தே வைரஸ் பரவி இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் முன்னர் குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. வூஹான் நகரிலுள்ள விலங்குகள் மருத்துவமனையில், உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கடந்த செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நிலையில் நேற்று ஆராய்ச்சிக் கூடத்தில் ஆய்வு நடத்தியுள்ளது.

முன்னதாக, அந்த நகரிலுள்ள மருத்துவமனைகள், நோய் பரவல் கட்டுப்பாட்டு மையங்கள், கொரோனா பரவ ஆரம்பித்த சந்தை ஆகியவற்றில் நிபுணர் குழு ஆய்வு செய்தது.

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ், வௌவாலின் உடலில் இருந்து உருமாற்றம் பெற்று மனிதர்களுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது. இருந்தாலும், இது தொடர்பான மர்மம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா எவ்வாறு உருவானது என்பதை ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா சென்றுள்ளது. வூஹானிலுள்ள நுண்ணுயிரியல் மையத்தில் ஆய்வு நடத்திய சுகாதார நிபுணர் குழு, முக்கிய தகவல்களையும் கொரோனா எங்கிருந்து, எப்படி பரவியது என்பதற்கான முக்கிய ஆதாரங்களையும் திரட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thu, 02/04/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை