மியான்மாரில் வீதிகளில் போர் வாகனங்கள்: மீண்டும் இணையம் முடக்கம்

மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடந்த பின், அதை எதிர்ப்பவர்களை ஒடுக்கத் தயாராகும் விதத்தில், மியான்மாரின் பல நகரங்களில், ஆயுதமேந்திய போர் வாகனங்கள் வீதிகளில் காணப்பட்டன. உள்ளூர் நேரப்படி, கடந்த 15, திங்கட்கிழமை) நள்ளிரவு ஒரு மணி முதல் கிட்டத்தட்ட நாடுமுழுவதும் முழுமையாக இணைய சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

மியான்மாரின் வடக்குப் பகுதியில் இருக்கும் கச்சின் என்கிற மாகாணத்தில், ஒன்பதாவது நாளாக நடந்து வந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்தினர் துப்பாக்க்கிச்சூடு நடத்தினர்.

மியான்மார் மக்கள் மீது அந்த நாட்டு இராணுவம் தாக்குதல் நடத்துவதாக ஐ.நா சபையின் அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

"இரவு நேரங்களில் சோதனை செய்வது, மக்களின் உரிமைகளைப் பறிப்பது, மீண்டும் இணையத்தை முடக்கியது போன்றவைகள் அடக்குமுறையின் அறிகுறிகளே. இது மியான்மார் மக்கள் மீது இராணுவம் போர் தொடுப்பது போன்றுள்ளது. இராணுவ ஜெனரல்கள் இதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள்" என ஐ.நா சபைக்கு மியான்மார் விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை சமர்பிக்கும் டாம் ஆண்ட்ரூவ்ஸ் தன் ட்விட்டரில் கூறியுள்ளார். மியான்மாரில் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு எதிராக, அந்த நாட்டு இராணுவம் வன்முறையில் இறங்கக் கூடாது" என ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

சமீபத்தில், ஆங் சான் சூச்சியின் ஜனநாயக ரீதியிலான அரசாங்கத்தை, ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை மூலம் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அந்த தேர்தலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாகக் கூறி வருகிறது அந்த நாட்டு இராணுவம்.

தற்போது ஆங் சான் சூச்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மார் முழுவதும், ஒன்பதாவது நாளாக இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கச்சின் மாகாணத்தில், மித்கினா என்கிற நகரத்தில், போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது, அதில் துப்பாக்கிச் சூடு நடந்த சத்தம் கேட்டது. இதில் உண்மையான துப்பாக்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா அல்லது ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதில் தெளிவில்லை. மேலும், ஐந்து பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மியான்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்த பின், முதல் முறையாக யங்கூன் நகர சாலையில் ஆயுதமேந்திய இராணுவ போர் வாகனங்கள் காணப்பட்டன. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.00 மணி முதல் காலை 9.00 மணி வரை, மியான்மாரின் இணைய சேவைகளைத் துண்டிக்க வேண்டும் என தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

மியான்மாரில் இந்த இணையத் தடைக்குப் பிறகு, வழக்கமாக இணைய சேவையைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையில் வெறும் 14% தான் இருப்பதாக, நெட்பிளாக் என்கிற கண்காணிப்புக் குழு ஒன்று கூறுகிறது.

இரவு நேரங்களில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதாக தலைநகரான நேப்பியேட்டோவில் மருத்துவராக பணிபுரியும் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

"இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது எனக்கு கவலையளிக்கிறது. இந்த நேரத்தில் தான் காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் என்னைப் போன்றவர்களைக் கைது செய்வார்கள்" என்கிறார் ஒரு மருத்துவர். பாதுகாப்பு கருதி அந்த மருத்துவர் பெயர் குறிப்பிடவில்லை.

யங்கூனில் இருக்கும் அமெரிக்க தூதரகம், ஊரடங்கு சமயத்தில் தங்களது (அமெரிக்க) நாட்டு நாட்டு மக்களை வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏழு முக்கிய எதிர்கட்சி தலைவர்களுக்கு பிடியாணை கொடுக்கப்பட்டிருப்பதாக கடந்த சனிக்கிழமையன்று மியான்மார் பாதுகாப்புப் படை தெரிவித்திருந்தது. மேலும், அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் இரவு நேரத்தில் மேற்கொள்ளும் ரோந்துப் பணிகளின் போது தங்கள் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களை எச்சரிக்க, மக்கள் தங்கள் பாத்திர பண்டங்களை அடித்து ஒலி எழுப்புவதை ஒரு காணொளி காட்டுகிறது.

24 மணி நேரத்துக்கு மேல் ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என்றாலோ, தனியாருக்குச் சொந்தமான இடங்களில் தேடுதல் நடத்த வேண்டுமென்றாலோ நீதிமன்ற உத்தரவு அவசியம் என்கிற சட்டங்களை கடந்த சனிக்கிழமை, மியான்மார் இராணுவம் ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்த ஓராண்டுக்கு இராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, தன் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மார் இராணுவம்.

Wed, 02/17/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை