யானை மனித மோதலுக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு

திட்டத்தை உருவாக்க கோபா குழு பரிந்துரை

இலங்கையில் பாரிய பிரச்சினையாகவுள்ள யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டமொன்றை தயாரிக்குமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது.

யானை மனித மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கலாநிதி பிரித்விராஜ் பர்னாந்து தலைமையிலான விசேட குழுவின் பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதுடன், இதனைவிட நிபுணத்துவ குழுவினால் 2006ஆம் ஆண்டு யானை மனிதன் மோதலைத் தீர்ப்பதற்கு தயாரிக்கப்பட்ட தேசிய கொள்கைத் திட்டத்தை ஆராய்ந்து இந்த செயற்றிட்டத்தைத் தயாரிக்குமாறு கோப் குழு தெரிவித்தது.

யானை மனித மோதலால் உலகில் அதிகமான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை காணப்படுவதுடன், அதிகமான மனித உயிர்கள் இழக்கப்படும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.

எனவே, இப் பிரச்சினையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பது பற்றி இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி, வீரசுமன வீரசிங்ஹ, நிரோஷன் பெரேரா, பீ.வை.ஜீ.ரட்ணசேகர ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அறிக்கையின் பரிந்துரைக்கமைய வனஜீராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு இது தொடர்பான முழுப் பொறுப்பை வழங்க முடியாது என்றும், இதற்காகப் பொது மக்களின் ஒத்துழைப்பு, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள், கமநல சேவைகள் திணைக்களம், மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மின்சார வேலிகள் அமைக்கப்படுவதுடன் அவை பராமரிக்கப்பட வேண்டும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மக்கள் தாமாகவே முன்வந்து மின்சார வேலிகளை அமைத்தல் மற்றும் விவசாயம் செய்யும் காலங்களில் மாத்திரம் தற்காலிக மின்சார வேலிகளை அமைப்பது போன்ற மாற்று யோசனைகளும் இந்தப் பரிந்துரைகளில் உள்ளடங்கியுள்ளன.

யானைகளை விரட்டுவதற்கு தற்பொழுது பயன்படுத்தப்படும் பாரம்பரிய நடைமுறை 50 வருடத்துக்கு அண்மித்த காலப்பகுதியில் தோல்வியடைந்திருப்பதாக யானை மனிதன் மோதல் தொடர்பில் ஆராய்ச்சி அனுபவம் மிக்க நிபுணரமான கலாநிதி பிரித்விராஜ் பர்னாந்து இங்கு தெரிவித்தார்.

சமூக பங்களிப்புடன் சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் பங்குதாரர்களின் பங்களிப்பைப் பெற்று வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகள் காணப்படுவதாகவும், இதனை முன்னுதாரணமாகக் கொண்டு அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொருந்தும் வகையில் பயன்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

Thu, 02/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை