அரிசி இறக்குமதி கட்டுப்பாட்டால் விவசாயிகளுக்கு அதிக நன்மை

- உள்ளூர் நெல்லுக்கு அதிக பெறுமதி

வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தின் பிரதிபலனாக தற்போது காணப்படும் நிர்ணய விலையை விடவும் அதிக பெறுமதி எமது விவசாயிகளின் நெல்லுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது என்று மகாவலி வலயங்கள் சார்ந்த கால்வாய்கள் மற்றும் குடியிருப்புக்களின் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார். தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 55 விடவும் அதிக விலை கிடைக்கப்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மகாவலி 'பி' வலயத்தின் தம்மின்ன மற்றும் செவனப்பிட்டிய பிரதேசங்களில் உள்ள மகாவலி முன்மாதிரி விவசாயப் பண்ணைகளைப் பார்வையிடச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர், விவசாயிகளுடன் நடாத்திய சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை 'மகாவலி பாரிய விவசாயப் புரட்சி - ஒழுங்குமுறையான விவசாயத்திற்கான பாதை' என்ற தொனிப்பொருளின் ஊடான வேலைத்திட்டத்தின் கீழ் நெல் விளைச்சலின் அறுவடையை அதிகரிக்கச் செய்யவென விவசாய மக்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமும் செவனப்பிட்டிய மகாவலி பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத் குறிப்பிட்டதாவது, 'தேசிய உணவு உற்பத்திச் செயற்பாட்டிற்கு மகாவலி வலயங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தற்போது நூற்றுக்கு இருபது வீதப் பங்களிப்பை பெற்றுக்கொடுக்கின்றனர்.

இப்பங்களிப்பை அடுத்துவரும் மூன்று வருடங்களில் நூற்றுக்கு முப்பது வீதமாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மகாவலி விவசாய நிலங்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உணவுப் பொருட்களின் இறக்குமதியைக் குறிப்பிடத்தக்களவில் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு சுமார் 220 பில்லியன் ரூபா நிதியைச் செலவிடுகின்றது.

ஆனால் நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாட்டுக்குள்ளேயே உற்பத்தி செய்து கொள்ளும் போது அவ்வாறு பெருந்தொகை நிதி வெளிநாடுகளுக்கு செல்லாது சேமித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

தேசிய உணவு உற்பத்தி செயற்பாட்டைப் பலப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சமும் ஏற்படாது. அதன் நிமித்தம் இப்போதிருந்தே மகாவலி வலயங்களில் வசிக்கும் விவசாய மக்களைத் தயார் படுத்துவது எமது பொறுப்பு.

இதேவேளை கடந்த சில தினங்களாக பல தரப்பினரும் நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டனர். என்றாலும் ஜனாதிபதி அதனைச் செய்யவில்லை.

அவர் அவ்வாறு செய்திருந்தால் இன்று விவசாயிகளின் நெல் அறுவடைக்கு சிறந்த விலையைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கும்.

தற்போது நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எப்போதும் தூர நோக்கின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கக்கூடியவர் என்பது மிகவும் தெளிவான விடயம். அவர் உண்மையில் தூரநோக்கு மிக்க தலைவராவார்' என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் டப்ளியூ. பி. பளுகஸ்வெவ, மகாவலி பி வலயத்தின் வதிவிடத் திட்ட முகாமையாளர் நொயல் ஜயசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

மர்லின் மரிக்கார்

Fri, 02/26/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை