அரசு நீதியை பெற்றுத்தரும் எனும் நம்பிக்கை எமக்குண்டு

இல்லையேல் சர்வதேச நீதிமன்றை நாட நேரிடும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் நீதியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.அவ்வாறு எமது மக்கள் எதிர்பார்க்கும் நீதி கிடைக்காவிட்டால் நாம் சர்வதேச அமைப்புகளின் உதவியை நாட நேரிடும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

சி.ஐ.டி இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதா என்பதில் எம்மால் திருப்திப்பட முடியவில்லை. விசாரணை நடவடிக்கைகளில் குறைபாடுகள் உள்ளன.சில விடயங்களில் நாம் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமுள்ளது என்றும் பேராயர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பேராயர் மேலும் தெரிவித்ததாவது;

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பிரதி ஒன்றை நான் கோரியுள்ளேன். அது இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.இனியும் எம்மால் காத்திருக்க முடியாது. ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை பிரதி விரைவில் எமக்குப் பெற்றுத் தர வேண்டும். அவ்வாறு கிடைக்குமானால் எமக்கு அது தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக் கொள்ள முடியும்.

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு நானும் சாட்சியம் வழங்கினேன்.அதன் போது மேற்படி தாக்குதல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காதவர்கள் தொடர்பில் மட்டுமன்றி மேற்படி தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பதைத் தேடிப் பாருங்கள் என்று தெரிவித்தேன்.

விசாரணைக்குழு அறிக்கை மூலம் அதற்கு சாதகமான பதில் கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றேன்.

அண்மையில் நான் கொச்சிக்கடை மற்றும் கட்டுவாப்பிட்டிய பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினேன்.அவர்கள் அவர்களது கேள்விக்குப் பதிலை எதிர்பார்க்கின்றார்கள். ஏன் எமக்கு அவ்வாறு செய்தீர்கள்?அதை செய்தது யார்? என்பதே அந்த கேள்வி. அதனைத் தெரிந்து கொள்வதற்கு அவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதற்காக அவர்கள் மேலும் பொறுமையுடன் காத்திருக்கத் தயாரில்லை. எனக்கு அரசாங்கத்தின் மூலம் அல்லது ஆணைக்குழு மூலம் நீதி கிடைக்காவிட்டால் நாம் மாற்று தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிவரும். மேற்படி விசாரணை அறிக்கை மற்றும் அதற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் எமது தலைவர்கள் எமக்கு நீதியைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அரசாங்கம் என்ன செய்கின்றது என்பதை நாம் பார்த்து விட்டே எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள நாம் வெளிநாடுகளிலுள்ள சர்வதேச அமைப்புகளின் ஆதரவை பெற வேண்டி வரும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Fri, 02/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை