ஆங் சான் சூச்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுப் பதிவு

தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரின் பதவி கவிழ்க்கப்பட்ட ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி மீது இரண்டாவது குற்றவியல் குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு வழியாக கடந்த செவ்வாக்கிழமை நீதிமன்றத்தில் அவர் தோன்றியபோதே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான வோக்கி டோக்கிகளை வைத்திருந்ததாக சூக்கி மீது முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர் நாட்டின் தேசிய அனர்த்த சட்டத்தை மீறியதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விபரம் எதுவும் வெளியாகவில்லை.

மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் புதிய தேர்தலை நடத்துவது பற்றி இராணுவம் தொடர்ந்து உறுதி அளித்து வருகிறது.

கடந்த ஜனவரி 1ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பின்போது கைது செய்யப்பட்ட சூச்சி உட்பட ஜனநாயக முறையில் தேர்வான தலைவர்களை விடுவிக்கும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னர் முதல் முறை செய்தியாளர் சந்திப்பு ஒன்றை இராணுவம் நடத்தியுள்ளது. அதில் இராணுவம் நீண்ட காலம் ஆட்சியில் நிலைக்காது என்றும் திட்டமிடப்பட்ட தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் கட்சிக்கு அதிகாரத்தை கையளிப்பதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் சோ மின் டுன் தெரிவித்தார்.

எனினும் இந்தத் தேர்தல் நடத்தப்படும் காலம் பற்றிய விபரத்தை அவர் கூறத் தவறினார்.

ஆங் சான் சூச்சியின் ஆளும் கட்சி அமோக வெற்றியீட்டிய கடந்த நவம்பர் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக இராணுவம் ஆதாரம் இன்றி கூறிவந்த நிலையிலேயே இராணுவ சதிப்புரட்சிக்கும் அது நியாயமாகக் கூறப்பட்டது.

Thu, 02/18/2021 - 12:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை