இலங்கையுடன் உற்பத்தித் திறன் மிக்க ஈடுபாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

இலங்கையுடன் இணைந்து செயற்படுவதில் இந்தியா உறுதி

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளின் செயல்பாடு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்காக பரஸ்பரம் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இந்த விவகாரத்தில் இலங்கையுடன் உற்பத்தித்திறன் மிக்க ஈடுபாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளின் கூட்டு அபிவிருத்தி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவும் இலங்கையும் தமது ஒத்துழைப்பின் முன்னுரிமைக்குரிய விடயங்களில் ஒன்றாக சக்தித்துறைசார் பங்குடைமையை அடையாளம் கண்டுள்ளன. இலங்கையின் சக்தித்துறைசார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் திருகோணமலையிலுள்ள எண்ணெய்த் தாங்கிகளின் செயல்பாடு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்காக பரஸ்பரம் நலன்களைத் தரும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக ஆலோசனைகளும் பேச்சுக்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இலங்கையுடனான உற்பத்தித்திறன் மிக்க ஈடுபாட்டை நாம் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை மீண்டும் இலங்கை வசமாக்குவது தொடர்பில் கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதெனவும், அதனடிப்படையில் 2017ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு முயற்சிக்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும், திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் அனைத்தும் வெகுவிரைவில் இலங்கை வசமாகுமெனவும் சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

Fri, 02/19/2021 - 06:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை