முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் நிலைப்பாடு என்ன?

அலி சப்ரியிடம் கேள்வி தொடுத்த அதுரலிய

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்துக்கு அமைய முஸ்லிம் விவாகச் சட்டம் தொடர்பாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? என்பதை நீதி அமைச்சர் அலிசப்ரி சபையில் அறிவிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் நீதி அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைத் திட்டமாகும். இதன்படி இனம், மதங்களை அடிப்படையாக கொண்ட அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பான தனிப்பட்ட சட்டங்களை நீக்கி நாட்டில் ஒரே சட்டத்தின் கீழ் நாட்டை கொண்டு வருவதாக கூறப்பட்டது.

இலங்கையில் சட்டவாட்சியை ஏற்றுக்கொள்ளும் நாடாகும். இங்கு சகலருக்கும் சட்டம் செயற்படுத்தப்படும். இந்நிலையில் முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பாக உலகில் பல நாடுகளில் இணக்கப்பாடு இல்லை. அதேபோன்று முஸ்லிம் நாடுகள் பலவற்றிலும் இந்த சட்டம் செயற்படுத்தப்படுவதில்லை.

இலங்கைகயில் 10 வீதமான முஸ்லிம்கள் வாழும் நிலையில், அவர்களின் விவாக மற்றும் விவாகரத்து தொடர்பாக முஸ்லிம் விவாக சட்டம் உள்ளது. காதி நீதிமன்றத்திற்கு நீதி அமைச்சின் ஊடாகவே நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு ஏதேனும் தெளிவு உள்ளதா?

முஸ்லிம் ஆண்கள் வேறு மதங்களை சேர்ந்தவர்களை திருமணம் முடிக்கும் போது வேறு மதத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மதத்தில் இணைய வேண்டும். இதன்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு காதி நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்க்க வேண்டியுள்ளது.

சம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 02/10/2021 - 07:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை