முப்படையின் நீண்டநேர போராட்டத்தின் பின் கெரவலபிட்டிய குப்பை மேட்டில் பரவிய திடீர் தீ கட்டுப்பாட்டில்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை அண்மித்த பகுதியான கெரவலபிட்டிய குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் இராணுவத்தினரும் விமானப்படையினரும் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் இத் திடீர் தீ பரவியது. இது தொடர்பாக அவசர உதவி கோரப்பட்டதுடன் முப்படை வீரர்களும் ஸ்தலத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினர்.   அவசர நிலலைமையின் தேவையினை கருத்திற் கொண்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர உதவிக்காக ஆயுதப்படையின் உதவியைக் கோரியது.

உதவி கோரியதற்கு அமைவாக பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா,ஏனைய படைகளின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூவுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக உடனடியாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, இராணுவத்தின் ட்ரோன் அணிகளும், விமானப்படையின் பம்பி வாளி பொருத்தப்பட்ட பெல் 412ஹெலிக்கொப்டரும், இராணுவம் மற்றும் கடற்படை படையினரும் இந்த நடவடிக்கைகளுக்கு ஈடுப்படுத்தப்பட்டனர்..

நேற்றுக் (19) காலை 8.00 மணியளவில் படையினர் தீ பரவுவதை முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை 10.00 மணியளவில் 14 ஆவது படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 141 பிரிகேட் படையினர் தங்களது கனரக இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்களுடன் அங்கு மீண்டும் தீ பரவல் ஏற்படாத வகையில் குப்பைக் குவியல்களைத் சீர் செய்தனர். சொத்துக்களுக்கோ அல்லது பொது மக்களுக்கோ எதுவித சேதமும் ஏற்படவில்லை.

Sat, 02/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை