பொத்துவில் – பொலிகண்டி பேரணி விவகாரம் செல்வம் மற்றும் கலையரசன் எம்.பிக்களிடம் பொலிஸார் வாக்குமூலம்

நீதிமன்றில் ஆஜராக கலையரசனுக்கு அழைப்பாணை

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தவராசா கலையரசன் ஆகியோரிடம் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரிலுள்ள அலுவலகத்தில் நேற்று  காலை 09.00 மணியளவில் மாங்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த பொலிஸாரும் மதியம் 12 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து வருகை தந்த பொலிஸாரும் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

அத்துடன் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ள வருகை தருமாறும் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸார், சுமார் 03 மணிநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனிடம் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பெற்றனர்.

கடந்த 03ம் திகதி தொடக்கம் 06 திகதி வரையிலான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கலந்து கொள்வதற்கு எதிராக திருக்கோவில்- கல்முனை, அக்கரைப்பற்று பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பெற்று அவரிடம் வழங்கினர்.

இந்நிலையில் தடை உத்தரவை மீறி இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக, பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் வீட்டிற்கு நேற்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் சென்று அவரிடம் சுமார் 03 மணிநேர விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

தடை உத்தரவை மீறி பேரணியில் கலந்துகொண்ட த.கலையரசனுக்கு எதிராக பொலிஸார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணையும் வழங்கியுள்ளனர்.

அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரிடம் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sat, 02/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை