ஜனாதிபதி தலைமையில் குளங்கள் புனரமைக்கும் தேசிய திட்டம்

அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ

‘நீர்ப்பாசன சுபீட்சம்’ என்ற தொனிப் பொருளில் குளங்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனரமைக்கும் தேசிய திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை மறுதினம் (05)ஆம் திகதி பளுகஸ்வெவவிலும் 06ஆம் திகதி அநுராதபுரம் மாவட்ட தலாவயிலும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கமைய நிர்ப்பாசனத்துக்காக நீரைப்பெற்றுக்கொடுக்கும் பாரிய திட்டம் நீர்ப்பாசன அமைச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன விவசாய துறையின் அபிவிருத்திக்காகவும் தேசிய உணவு உற்பத்தி தொழிலை மேம்படுத்தி நாடுமுழுவதுமுள்ள கிராமங்களின் குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனர்நிர்மாணம் செய்யும் தேசிய திட்டம் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கொள்கைக்கு அமைய ' நீர்ப்பாசன சுபீட்சம்’ என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மகாவலி வலயங்கள் சார்ந்த கால்வாய்கள் மற்றும் குடியிருப்புகளின் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத்தின் கண்காணிப்பின் கீழ் மகாவலி வலயத்திலும், கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவின் கண்காணிப்பின் கீழ் ஏனைய மாகாணங்களை இணைத்து செயல்படுத்தும் நீர்ப்பாசன சுபீட்சம் தேசிய வேலைத்திட்டம் 05ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த 15 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு குடிநீர் வசதியையும், நீர்ப்பாசனத்துக்கு தேவையான நீரையும் வழங்கும் வட மத்திய மாகாண மஹா எல திட்ட நிர்மாண நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Wed, 02/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை